அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில் பாலாஜியின் வேட்பு மனுவை நிராகரிக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தான் சென்னை மாநகர போக்குவரத்தில் பணி புரிந்ததாக குறிப்பிடுள்ளார். மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு போக்குவரத்துக் கழகத்தில் பல்வேறு பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அப்போது 200க்கும் மேற்பட்டோர் தன்னிடம் வேலைக்காக அணுகியதாக குறிப்பிட்டுள்ளார்.

அப்போது தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி தனது உதவியாளர்கள் கார்த்திக் மற்றும் சண்முகம் மூலமாக சுமார் 4.25 கோடியை என்னிடம் பெற்றுக்கொண்டு நான் சிபாரிசு செய்த நபர்களுக்கு வேலை வாங்கித்தருவதாக உறுதியளித்தார். ஆனால் யாருக்கும் வேலை வாங்கித் தரவில்லை.அதன்பிறகு, பணத்தை திருப்பிக் கேட்டபோது, செந்தில் பாலாஜியும் அவரது ஆட்களும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதற்கிடையே செந்தில் பாலாஜியின் தூண்டுதலின் பேரில் போலீசார் என்னையும், மேலும் சிலரையும் கைது செய்தனர். நான் பலரிடமும் வாங்கிய பணத்தை அவரது பிஏக்கள் மூலமாக செந்தில் பாலாஜியிடம்தான் கொடுத்தேன் என்ற உண்மையை போலீசில் தெரிவித்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல வேறு பலரிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில், அவர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றவியல் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட்டு, பொதுவாழ்வி்ற்கு வரக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தற்போது நடைபெற உள்ள தேர்தலில் செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியில் இருந்தபோது, வேலை வாங்கித்தருவதாக கூறி அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணமோசடி செய்துள்ளார். எனவே, அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளரான செந்தில் பாலாஜியின் வேட்புமனுவை நிராகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

அந்த மனு இன்று தலைமை நீதிபதி கவுல், மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள் , வேட்பாளர் மீதுள்ள குற்றம் இன்னும் நிருபிக்கப்படவில்லை என்றும், தற்போது துணை ஆணையர் தலைமையில் பாதிக்கப்பட்டவர்களின் புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாலும் , தேர்தல் நடைமுறைகள் அமலில் இருப்பதால் இந்த வழக்கில் இடைகால உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறி பாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் நிலுவையில் இருக்கும் துணை ஆணையரின் விசாரணை குறித்த நிலை அறிக்கையை நவம்பர் 7ம் தேதியன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார். நவம்பர் 7ம் தேதியன்று அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி, கே.சி.பழனிச்சாமி ஆகியோரின் வேட்புமனுவை நிராகரிக்க கோரி ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.