அதிமுகவில் உட்கட்சி மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், செங்கோட்டையன் பாஜக தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சூழலில், சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sengottaiyan praises Modi and Amit Shah : தமிழகத்தில் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த அளவிற்கு தினந்தோறும் புதுப்புது சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அதிலும் அதிமுகவில் தினந்தோறும் உட்கட்சி மோதல்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல பிளவுகளாக பிரிந்துள்ளது. இதன் காரணமாக தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகிறது. இந்த நிலையில் பிரிந்து சென்ற தலைவர்கள் ஒருங்கிணைய வேண்டும் என அதிமுக மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன் தெரிவித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக டெல்லிக்கு சென்று பாஜக மூத்த தலைவர் செங்கோட்டையன் மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியிருந்தார்.
அதிமுகவில் உட்கட்சி மோதல்
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்த அவர், ஓபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகளை அதிமுகவில் இணைக்க வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனின் அனைத்து பொறுப்புகளையும் பறித்தார். இதனைடுத்து மீண்டும் டெல்லிக்கு சென்றவர் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து அதிமுகவில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் தொடர்பாக ஆலோசித்தார். இந்த சூழலில் குடியரசு துணை தலைவர் தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றிருந்தார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மோடி, அமித்ஷாவை புகழ்ந்த செங்கோட்டையன்
இன்றைய உலக தலைவர்களில் முதன்மையானவராக பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களாலும், இந்திய திருநாட்டின் இன்றைய இரும்பு மனிதராக திகழும் உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்களாலும் முன்மொழிபட்டவரும், இதயதெய்வம் புரட்சித்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அன்பை பெற்றவரும், நம் தமிழ்தேசத்தின் தனிபெரும் தலைவர் மேதகு ஆளுநர் உயர்திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பாரத திருநாட்டின் துணை குடியரசு தலைவராக தேர்வுபெற்று உள்ள இந்நாட்டின் பொன்னேட்டில் எழுதபடும் திருநாள் ஆகும். தன் பணிகாலத்தில் இந்திய தேசத்தை உயரத்திற்கு எடுத்து செல்ல மனம்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.


