சேலம்

மாற்றுத் திறனாளி சிறுமியை கற்பழித்து வன்புணர்வு செய்த கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம் மாவட்டம், சின்னவீராணம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அழகன் என்கிற பிரபு (33). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். 

இவர்களின் பக்கத்து வீட்டில் இருக்கும் 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமி டி.வி. பார்ப்பதற்காக இவரது வீட்டுக்கு வருவது வழக்கம்.

கடந்த 9.12.2013 அன்று டி.வி. பார்க்க வந்த அந்த சிறுமியை வழிமறித்த அழகன். அந்த சிறுமியை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்றார். அங்கு அந்த சிறுமியை கற்பழித்து வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். 

பின்னர், இதுகுறித்து சிறுமியின் தந்தை வீராணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து பிரபுவை கைது செய்தனர். 

சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி, "குற்றம் சாட்டப்பட்ட அழகனுக்க, மாற்றுத் திறனாளி சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.52 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது" என்று தீர்ப்பு வழங்கினார்.