சேகர் ரெட்டிக்கு பணம்மாற்றிக் கொடுத்த மேலும் இருவர் கைது
தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுத்ததாக மகாவீர் இரானி, அசோக் ஜெயின் ஆகிய 2 பேரை அமலாக்க துறையினர் நேற்று ைகது செய்தனர்.
சென்னை தி.நகரை தொழிலதிபர் சேகர் ரெட்டி, வீட்டில் கடந்த 8–ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது, அவரது வீட்டில் ரூ.34 கோடிக்கு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகர் ரெட்டி, அவரது கூட்டாளி சீனிவாசலு ஆகியோரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான ஆடிட்டர் பிரேம்குமார், ரத்தினம் என்ற திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய மகாவீர் இரானி மற்றும் அசோக் ஜெயின் ஆகிய 2 பேரை அமலாக்க துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். இவர்கள் ரூ.10 கோடி பழைய நோட்டுகள், 6.5 கிலோ தங்கத்தினையும் பறிமுதல் செய்யப்பட்டன என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.அவர்கள் இருவரையும் ஜனவரி 11ந்தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
