சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக தமிழகத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது எனவும் தமிழகத்தில் இருந்தும் செல்லும் பக்தர்களின் உதவிக்காக  சபரிமலையிலே தமிழக அதிகாரிகள் இருவர் நிரந்தர பணியில் உள்ளதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார் 

வெள்ள நிவாரண நிதி- மத்திய அரசு மீது நம்பிக்கை

சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை, ஓட்டேரி பகுதியில் உள்ள செல்லப்பா தெருவில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, போர்வை, புடவை, பால், ரஸ்க் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ள மிக்ஜாம் புயல் வெள்ளத்திற்கான 12 ஆயிரத்து 659 கோடி ரூபாயை நிவாரண நிதியாக ஒன்றிய அரசு விடுவிக்கும் என நம்புகிறோம். மிக்ஜாம் புயலில் தமிழ்நாடு அரசின் மீட்பு நடவடிக்கையை மத்தியக்குழு பாராட்டி உள்ளது. 

சபரிமலைக்கு பேருந்து

தமிழகத்தின் வெள்ள சேதங்களை முதலமைச்சர் ஈடு செய்வார்கள். கடும் நிதி நெருக்கடியிலும் மக்களுக்கு 6000 நிவாரண நிதி அளித்த முதலமைச்சரை மக்கள் பாராட்டுகிறார்கள். மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி அன்றாட பணிகளை மேற்கொள்கிறார்கள். சென்னையில்தான் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதுகுறித்தான தகவல்கள் கணக்கெடுக்கப்பட்டு மத்தியக் குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு சீரான போக்குவரத்துக்காக தமிழகத்தின் தேனி, குமுளி போன்ற மாவட்டங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கவும் கேரள மாநிலம் பம்பையில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கவும் போக்குவரத்து துறையிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிஸ்கெட், தண்ணீர் பாக்கெட் அனுப்பி வைப்பு

சபரிமலை பக்தர்களுக்காக 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் 10 லட்சம் தண்ணீர் கேன்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட உள்ளன. சபரிமலை தற்போது இயல்பு நிலையில் தரிசனம் நடைபெறுகிறது. மகளிர் உரிமைத்தொகை எப்படி வழங்கப்பட்டதோ அவ்வாறு நிவாரண உதவியும் பொதுமக்களுக்கு எத்தைய சிரமமும் இல்லாமலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அளிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் எனத் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

இது என்னடா வம்பா போச்சு.. ஐயப்ப பக்தர்கள் குவியும் நேரத்தில் கேரளாவில் மீண்டும் வேலையை காட்டும் கொரோனா.!