இது என்னடா வம்பா போச்சு.. ஐயப்ப பக்தர்கள் குவியும் நேரத்தில் கேரளாவில் மீண்டும் வேலையை காட்டும் கொரோனா.!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் கேரளாவில் திடீரென கொரோனா தொற்று அதிகரித்து வருவது பக்தர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடியது. பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்திவிட்டு சென்றது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் எடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கை மற்றும் தடுப்பூசியால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 479-ஆக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்த மாதத்தில் திடீரென கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 949ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 90% கேரளாவில் இருந்து தான் பதிவாகி உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அதன் அறிகுறிகள் 2 மாதங்கள் நீடிப்பதாகவும் மரணம் அரிதாகவே நிகழ்வதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வரும் நிலையில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாஸ்க், சானிடைசர் பயன்படுத்துவதை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.