கர்ம வீரர் காமராஜரின் மறைவுக்காக அவருக்கு முன்னரே உயிரிழந்த பேரறிஞர் அண்ணா கண்ணீர் விட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனுமான மு.க.முத்துவின் மறைவைத் தொடர்ந்து ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் மு.க.முத்துவின் மறைவால் சோகத்தில் இருக்கும் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதாக விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், நானும், முதல்வர் ஸ்டாலினும் வெவ்வேறு பாதைகளில் பயணித்து வந்தாலும் இருவருக்கும் இடையே இன்னும் உறவு நீடிக்கிறது. அதே போல தான் காமராஜர் இறந்ததற்கு அதிகம் அழுதது அறிஞர் அண்ணா தான் என்பார்கள் என்று கூறினார்.
முன்னாள் முதல்வர்களான பேரறிஞர் அண்ணா 1969ம் ஆண்டு உயிரிழந்த நிலையில், கர்ம வீரர் காமராஜர் உயிரிழந்தது 1975ம் ஆண்டு. அதாவது காமராஜர் உயிரிழப்பதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அண்ணா உயிரிழந்துவிட்ட நிலையில் அவர் எப்படி காமராஜரின் மறைவிற்கு கண்ணீர் சிந்தியிருக்க முடியும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வரலாற்றில் பல்வேறு நிகழ்வுகளை புள்ளி விவரங்களுடன் குறிப்பிடும் சீமான் வரலாற்றை முழுமையாக தெரிந்து கொண்டு கருத்து தெரிவிக்க வேண்டும் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
