Asianet News TamilAsianet News Tamil

நினைத்த நேரத்தில் பந்தாடவே இந்த முயற்சி.. பாஜக அரசை திமுக கடுமையாக எதிர்க்க வேண்டும் ..சீறும் சீமான்

மாநில அரசுகளின் தன்னாட்சி உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையிலான மத்திய அரசின், சதி முயற்சிகளை, திமுக அரசு தொடக்க நிலையிலேயே மிகக்கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று நாம் தழிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
 

Seeman Statement about BJP Government
Author
Tamilnádu, First Published Jan 22, 2022, 3:52 PM IST

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில நிர்வாகங்களில் பணியாற்றும் இந்திய குடிமைப்பணி அதிகாரிகளை, மாநில அரசுகளின் அனுமதியின்றித் திரும்பப்பெறும் மோடி அரசின் முடிவு கடும் அதிர்ச்சியளிக்கிறது. மாநில அரசுகளின் இறையாண்மையை முற்றாக அழிக்கும் வகையிலான,ஆளும் பாஜக அரசின் தொடர் எதேச்சதிகார செயல்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியது.

நிர்வாகம், காவல், வனத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மாநில அரசின் ஆட்சி பணிகளில் பணியாற்றும், இந்திய குடிமைப்பணி அதிகாரிகளை, ஒன்றிய அரசுப் பணிகளுக்கு மாற்றுவதற்கு முன், தொடர்புடைய மாநில அரசுகளின் அனுமதியைப் பெறவேண்டும் என்ற குடிமைப்பணியாளர்கள் நியமன விதிகள் – 1954, விதி 6 ஐ, பாஜக அரசு மாற்ற முனைவது, மாநில அரசுகளின் அதிகார உரிமையைப் பறிக்கும் கொடுஞ்செயலாகும். 

Seeman Statement about BJP Government

ஏற்கனவே மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் பற்பல திருத்தச் சட்டங்களைக் கொண்டுவந்து, எவ்வித விவாதமுமின்றிக் குறுக்கு வழியில் நிறைவேற்றி நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தையே கேலிக்கூத்தாக்கியுள்ளது பாஜக அரசு. அதன்மூலம் மாநிலங்களின் கட்டுப்பாட்டிலிருந்த கல்வி, நிதி, மின்சாரம், வேளாண்மை, மீன்வளம், நீர்வளம், கனிம வளம், காடு வளம் உள்ளிட்டவைகளின் மீதான உரிமைகளை ஒவ்வொன்றாகத் தட்டிப் பறித்து, மாநில அரசுகளை உள்ளாட்சி அமைப்புகளைவிடவும், அதிகாரம் குறைந்த பொம்மை அரசுகளாக மோடி அரசு மாற்றி வருகிறது.

அதன் நீட்சியாகத் தற்போது அத்துறைகளை நிர்வகிக்கும், குடிமைப்பணி அதிகாரிகள் மீதான மாநில அரசுகளின் நிர்வாக அதிகாரங்களையும் பறிக்க முனைவது, ஒற்றையாட்சி வல்லாதிக்க முறைமையை நோக்கி இந்திய ஒன்றியத்தை முன் நகர்த்தும் சூழ்ச்சியேயன்றி வேறில்லை. குடிமைப்பணி பணியாளர்கள் நியமன விதியினைத் திருத்துவதன் மூலம் ஆளும் அரசுகள் தன் விருப்பம்போல் குடிமைப்பணி அதிகாரிகளை நினைத்த நேரத்தில் பந்தாட முடியும். குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில நலனுக்காகப் பொறுப்புணர்ந்து பணியாற்றும் அதிகாரிகள் இதன் மூலம் பெரும் அச்சுறுத்தலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடும்.

Seeman Statement about BJP Government

அதுமட்டுமன்றி, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, மத்திய குற்றவியல் துறை உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளை மோடி அரசு தனது கைப்பாவையாக மாற்றி நிறுத்தியுள்ளதைப்போல, குடிமைப்பணி அதிகாரிகளையும் மத்திய அரசின் ஏவலாளிகளாக மாற்றும் அவலநிலையையும் உருவாக்கும். மேலும், இந்திய அரசியலமைப்பின் முக்கியக் கூறுகளான பன்முகத்தன்மை, கூட்டாட்சித் தத்துவம், மாநிலங்களின் இறையாண்மை ஆகியவற்றை முற்றாக அழிக்ககூடிய மத்திய அரசின் இத்தகைய அதிகார வரம்புமீறல் நடவடிக்கைகள், மாநில அரச நிர்வாகத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி, மக்கள் பணிகளில் பெரும் தொய்வையும், மக்களாட்சி முறைமைகளில் பெரும் தோல்வியையும் ஏற்படுத்திவிடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Seeman Statement about BJP Government

ஆகவே மக்களுக்கும், அரசுக்கும் இணைப்புப் பாலமாகச் செயல்படும் குடிமைப்பணி அதிகாரிகளை, தன்னிச்சையாகத் திரும்பப்பெறும் ஒற்றைமய அதிகார குவிப்பு சூழ்ச்சியை பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், மாநில அரசுகளின் தன்னாட்சி உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையிலான மத்திய அரசின், இத்தகைய சதி முயற்சிகளை, திமுக அரசு தொடக்க நிலையிலேயே மிகக்கடுமையாக எதிர்த்து திரும்பப்பெறச் செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொள்வதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios