சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 6 பேரை சீமான் அறிவித்துள்ளார். வீரப்பன் மகள் வித்யா ராணிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான திமுக ஆட்சியை தக்க வைப்பதில் தீவிரமாக உள்ளது. அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற துடிக்கிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக கருதப்படும் நடிகர் விஜய்யின் தவெக தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

வீரப்பன் மகள் வித்யா ராணிக்கு சீட்

இதேபோல் சீமானின் நாம் தமிழர் கட்சி இந்த முறையும் வழக்கம்போல் தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், சீமான் நாம் தமிழர் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்களை இப்போதே அறிவித்து அதிரடி காட்டியுள்ளார். அதாவது மேட்டூர் சட்டப்பேரவை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனின் மகள் வித்யா ராணி வீரப்பன் போட்டியிடுவார் என்று சீமான் அறிவித்துள்ளார்.

6 வேட்பாளர்கள் அறிவிப்பு

இதேபோல் சங்ககிரி சட்டப்பேரவை தொகுதியில் நித்தியா அருண் போட்டியிடுவார் என்றும், வீரபாண்டி தொகுதியில் ராஜேஷ் குமார் போட்டியிடுவார் எனவும் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் சேலம் மேற்கு தொகுதியில் சுரேஷ்குமார், கெங்கவள்ளியில் அபிராமி, ஆத்தூர் தொகுதியில் மோனிஷா சின்னத்துரை ஆகியோர் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாமகவில் அரசியலை தொடங்கிய வித்யா ராணி

இதில் வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு சீமான் நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலிலும் சீட் கொடுத்துள்ளார். முதன்முதலில் பாமகவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய வித்யா ராணி, பின்பு பாஜகவில் இணைந்தார். இதன்பின்பு அங்கிருந்து விலகி நாம் தமிழர் கட்சியின் இணைந்தார்.

மீதமுள்ள வேட்பாளர்கள் அறிவிப்பு எப்போது?

கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட வித்யா ராணி, 4வது இடம் பிடித்தார். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக வேட்பாளர்களை அறிவிப்பதை நாம் தமிழர் கட்சி வழக்கமாக கொண்டுள்ளது. பிப்ரவரி 7ம் தேதி நடைபெற உள்ள இன எழுச்சி மாநாட்டில் சட்டப்பேரவி தேர்தலில் போட்டியிடும் மீதமுள்ள வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என்று சீமான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.