Asianet News TamilAsianet News Tamil

தவறான சிகிச்சையால் அப்போ பிரியா உயிரிழப்பு! இப்போ குழந்தையின் கை துண்டிப்பு.!1 கோடி இழப்பீடு வழங்கிடுக- சீமான்

குழந்தை மயூருக்கு தவறான அறுவை சிகிச்சையளித்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள சீமான், வலது கையைச் சரிசெய்யத் தேவையான உயர்தர நவீன மருத்துவச் சிகிச்சைக்கான முழு செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Seeman demands Rs 1 crore compensation for boy who lost his arm due to mistreatment
Author
First Published Jul 4, 2023, 8:27 AM IST | Last Updated Jul 4, 2023, 8:27 AM IST

குழந்தையின் கை அகற்றம்

தலையில் ஏற்பட்ட சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையின் கை அழுகிய நிலையில் வலது கை முழுவதுமாக அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் - அஜிசா இணையரின் ஒன்றரை வயது அன்புமகன் முகமது மையூருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றப்பட்டுள்ள செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால் பந்தாட்ட வீராங்கனை அன்பு மகள் பிரியா, 

Seeman demands Rs 1 crore compensation for boy who lost his arm due to mistreatment

மருத்துவர்களின் அலட்சியம்

ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வலது காலில் செய்யப்பட்ட தவறான அறுவை சிகிச்சை காரணமாக உயிரிழந்த பெருந்துயரத்தின் வடு மறைவதற்குள்,தற்போது அன்புமகன் மையூரின் கை தவறான சிகிச்சையால் அகற்றப்பட்டுள்ளது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும். மகள் பிரியா உயிரிழந்தபோதே அரசு மருத்துவமனைகள் ஏழை எளிய மக்களின் உயிரோடும், உடல் நலத்தோடும் அலட்சியமாக செயல்படக்கூடாது என்று கண்டித்திருந்தேன். மேலும், திமுக அரசும், அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையையும், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்யத் தொடர்ச்சியாகத் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தியிருந்தேன். 

Seeman demands Rs 1 crore compensation for boy who lost his arm due to mistreatment

ஒரு கோடி ரூபாய் இழப்பீடு

ஆனால் திமுக அதனை செய்யத்தவறிய காரணத்திலேயே தற்போது மேலும் ஓர் குழந்தையின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே, மகள் பிரியா மற்றும் மகன் மயூருக்கு நேர்ந்தது போன்று, இனியும் அரசு மருத்துவமனைகளில் அலட்சியம் மற்றும் தவறான மருத்துவத்தினால் யாரும் பாதிக்கப்படாதவாறு தடுக்க உரிய அறிவுறுத்தலையும், வழிகாட்டலையும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மகன் மயூருக்கு தவறான அறுவை சிகிச்சையளித்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மகன் மயூரின் வலது கையைச் சரிசெய்யத் தேவையான உயர்தர நவீன மருத்துவச் சிகிச்சைக்கான முழு செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கவேண்டும் எனவும், அவரது குடும்பத்தினருக்கு துயர் துடைப்பு நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கவேண்டுமெனவும் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அழுகியதா.? நடந்தது என்ன.? அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவர்கள் தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios