Asianet News TamilAsianet News Tamil

என்எல்சிக்காக தமிழ்மக்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு ஒப்படைக்க திமுக அரசு துணை போவது ஏன்.? சீமான் ஆவேசம்

நிலத்திற்கு உரிய இழப்பீடும், நிலம் வழங்கும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்ற பூர்வகுடி தமிழர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் நெய்வேலி நிறுவனத்திற்கு, நிலங்களை அளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எவ்வகையில் நியாயமாகும்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Seeman condemned the destruction of agricultural crops by the NLC
Author
First Published Jul 26, 2023, 2:11 PM IST

நிலம் கையகப்படுத்தும் பணி

என்எல்சிக்காக விளைந்து நிற்கும் நெற்பயிர்களை அழிக்கும் நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தைத் தொடங்குவதற்காகத் தங்கள் நிலங்களை விட்டுக்கொடுத்த நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பூர்வகுடி தமிழர்கள் தற்போது வெறும் கூலிகளாக மட்டுமே வேலை செய்யக்கூடிய அவலநிலை நிலவுகிறது. அந்தளவுக்கு நெய்வேலி நிறுவனத்தில் வடமாநிலத்தவர் ஆதிக்கம் மேலோங்கி, மண்ணின் மைந்தர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படும் கொடுஞ்சூழல் உள்ளது. ஏற்கெனவே நிலம் வழங்கிய குடும்பங்களுக்கு ஒப்பந்தப்படி பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்யாமலும், 

Seeman condemned the destruction of agricultural crops by the NLC

திமுக அரசு துணைபோவது ஏன்.?

தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த தமிழ் இளைஞர்களுக்குப் பணி வழங்காமலும் தொடர்ந்து இனப்பாகுபாடு கடைபிடிக்கிறது நெய்வேலி நிலக்கரி நிறுவனம்.அதுமட்டுமின்றி, 2025 ஆம் ஆண்டுக்குள் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்கவும் மோடி அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் தனியாருக்குத் தாரைவார்க்கப் போகும் நிறுவனத்திற்கு தமிழ் மக்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு ஒப்படைக்க தமிழ்நாடு அரசு துணைபோவது ஏன்?

நெய்வேலி நிறுவனத்தில் பறிபோகும் தமிழர்களின் உரிமையைப் பெற்றுக்கொடுக்க எவ்வித முயற்சியும் எடுக்காத திமுக அரசு, தமிழர் நிலங்களை மட்டும் பறித்துக்கொடுக்க முனைப்புக் காட்டுவது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். ஏற்கெனவே நிலக்கரி எடுப்பதற்காக தமிழர்களிடம் பறிக்கப்பட்ட 1000 ஏக்கர் நிலங்கள் இன்னும் பயன்படுத்தாது இருப்பில் உள்ள நிலையில், மேலும், மேலும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வலுக்கட்டாயமாக எதற்குப் பறிக்க வேண்டும்?

Seeman condemned the destruction of agricultural crops by the NLC

இழப்பீடும் இல்லை, வேலையும் இல்லை

நிலத்திற்கு உரிய இழப்பீடும், நிலம் வழங்கும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்ற பூர்வகுடி தமிழர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் நெய்வேலி நிறுவனத்திற்கு, நிலங்களை அளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எவ்வகையில் நியாயமாகும்? பொதுத்துறை நிறுவனமாக இருக்கும்போதே உரிய இழப்பீடும், நிரந்தரப் பணியும் வழங்க மறுக்கும் நிலையில், விரைவில் தனியார் மயமாகப்போகும் நிறுவனத்தை நம்பி தமிழர்கள் தங்கள் நிலங்களை எவ்வாறு ஒப்படைக்க முடியும்? நிலங்களை வழங்க மறுக்கும் விவசாயிகளை மிரட்டி திமுக அரசு அச்சுறுத்துவதும், கைது செய்து சிறைபடுத்துவதும் கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

Seeman condemned the destruction of agricultural crops by the NLC
நிலங்களை அபகரிப்பதை கைவிட வேண்டும்

ஆகவே, விவசாயிகளின் கடும் எதிர்ப்பினையும் மீறி, சிறிதும் மனச்சான்று இன்றி விளைந்த பயிர்களை அழித்து, விளைநிலங்களில் இரண்டாவது சுரங்கப்பணிகளைத் தொடங்கியுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அத்துமீறலை இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், நிலங்களைத் தர மறுக்கும் விவசாயிகளை கைது செய்யும் போக்கினை திமுக அரசு கைவிடுவதோடு, தனியார் மயமாகவிருக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வலுக்கட்டாயமாக தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பதற்குத் துணைபோவதையும் கைவிட வேண்டுமென சீமான்  கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

விளைந்து நிற்கும் நெற்பயிற்களை நவீன இயந்திரங்கள் மூலம் அழிக்கும் என்எல்சி நிர்வாகம்..! வேதனையில் விவசாயிகள்

Follow Us:
Download App:
  • android
  • ios