வரும் 15ம் தேதி நாடு முழுவதும் 71வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தை தீவிரவாத கும்பல், சீர்க்குலைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் வழிப்பாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் உள்பட பல பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையொட்டி சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். அந்தந்த பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகள், லாட்ஜ்களில் சந்தேகப்படும்படி யாராவது தங்கினால், உடனடியாக தகவல் கொடுக்கும்படி அதன் உரியமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், சாதாரண உடையில் உளவு துறை, மத்திய குற்றப்பிரிவு, ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு  போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை அண்ணாசாலை அருகே வாலாஜா சாலையில் உள்ள தனியார் விடுதியில், சந்தேகப்படும்படி 4 பேர் தங்கியுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற போலீசார், ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இதைதொடர்ந்து நேற்று முன்தினம் இரவு, தனியார் விடுதியில் இருந்த 4 பேரை, ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பி அஸ்லம், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், அவர்கள் தங்கியிருந்த அறையில் மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய சோதனையில் கை துப்பாக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடத்து அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். 

அதில், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கோபிநாத், அண்ணா நகரை சேர்ந்த முருகன், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த குமார்த, பிரகாஷ்  என தெரிந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், துப்பாக்கி விற்பனை செய்வதற்காக அறை எடுத்து தங்கியது தெரிந்தது.

அவர்களிடிடம் இருந்து, 9 எம்எம்  பிஸ்டல் துப்பாக்கியை, குண்டுகளுடன் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம், துப்பாக்கியை யாரிடம் வாங்கினார்கள். யாரிடம் விற்பனை செய்ய இருந்தனர். இதன் பின்னணியில் யார் உள்ளனர். இவர்கள் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

சுதந்திர தின விழா கொண்டாடும் நேரத்தில், தலைமை செயலகம் அருகே, தனியார் விடுதியில் துப்பாக்கியுடன் 4 பேர் சிக்கிய சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.