தஞ்சாவூர்

கிராம அஞ்சல் ஊழியர்கள் இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கிராம அஞ்சல் நிலையங்களும் மூடப்பட்டு மணியார்டர், அஞ்சல்கள் அனுப்ப முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஏழாவது ஊதிய குழுவின் சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி ஆகஸ்டு 16-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய கிராம அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.

அதன்படி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

தஞ்சை கோட்டத்தில் கிராம அஞ்சல் ஊழியர்கள் நேற்று 2-வது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை கோட்டத்தில் தஞ்சை, மன்னார்குடி, பாபநாசம், ஆகிய பகுதிகளில் உள்ள 473 அஞ்சல் நிலையங்களை சேர்ந்த 600 ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம அஞ்சல் ஊழியர்கள் நேற்று தஞ்சை தலைமை அஞ்சல் நிலையம் முன்பு உட்கார்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

இதில் தலைவர் ஜானகிராமன், பொருளாளர் கருப்புசாமி, ஆலோசகர்கள் ஜெயராமன், சாகுல்அமீது, செயலாளர் செபஸ்டின் உள்பட பலர் பங்கேற்றனர்.

அப்போது அவர்கள், “கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை வழங்கி இலாகா ஊழியர்களாக்க வேண்டும்.

மத்திய நிர்வாக தீர்ப்பாயமும், சென்னை நிர்வாக தீர்ப்பாயமும் வழங்கிய தீர்ப்பின்படி கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து மிரட்டும் அதிகாரிகளின் ஆணவப்போக்கை கைவிட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் தஞ்சை கோட்டத்தில் உள்ள 473 கிராம அஞ்சல் நிலையங்களும் மூடப்பட்டதால் மணியார்டர், அஞ்சல்கள் அனுப்புவது உள்ளிட்ட பணிகள் 2-வது நாளாக பாதிக்கப்பட்டு உள்ளது.