Seeman : தமிழ்நாட்டு உரிமையைப் பெற முடியாமல் மாறி மாறி மண்டியிட்டு அடிபணிவதும் வெட்கக்கேடானது- சீறும் சீமான்

முல்லைப்பெரியாறு அணையை இடிக்கவும், புதிய அணை கட்டுவதற்கும் இந்திய ஒன்றியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதிகேட்டு கேரள மாநில அரசு விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ள சீமான், தென்தமிழ்நாட்டை பாலை நிலமாக்கும் கேரள அரசின் சூழ்ச்சி வன்மையான கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். 

Seaman condemns Kerala government action in Mullai Periyar dam issue KAK

முல்லை பெரியாறு அணை விவகாரம்

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கிலேயப் பொறியாளர் மாமனிதர் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பெருமுயற்சியால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் நிலவிய கடும் வறட்சியைப் போக்கவே 1895ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் முல்லை பெரியாறு அணை மூலம் நீராதாரம் பெற்று வருகிறது. இந்த அணையால் 5 மாவட்டங்களில் உள்ள கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதோடு, ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் முல்லை பெரியாறு அணை உள்ளது.

 அணையைப் பாதுகாத்துப் பராமரிக்கும் உரிமை தமிழ்நாடு அரசின் வசம் இருக்குமென்றும் முடிவு செய்யப்பட்டது. அணைப் பாதுகாப்பையும், தமிழ்நாடு அரசின் அணையைப் பாதுகாக்கும் உரிமையையும் உச்சநீதிமன்றமே உறுதி செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக, கேரள மாநில அரசு முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்று பொய்ப்பரப்புரையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஈடுபடுவதும், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியாதபடி தடுப்பதும் தொடர்கதையாகிவிட்டது.  அதன் நீட்சியாகவே தற்போதுள்ள அணையை இடிக்கவும் சுற்றுச்சூழல்  அனுமதி கேட்டு இந்திய ஒன்றிய அரசிடம் அனுமதிகேட்டு கேரள அரசு விண்ணப்பித்துள்ளது.  

Seaman condemns Kerala government action in Mullai Periyar dam issue KAK

இந்திய ஒருமைப்பாட்டை கேலிக்கூத்தாக்கும் செயல்

கேரள மாநிலத்திற்குத் தேவையான காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய விளைபொருட்களை தென் தமிழ்நாட்டு விவசாயப் பெருமக்களே விளைவித்து தரும் நிலையிலும், அதனை உணராது முல்லைப்பெரியாறு அணையை உடைப்பதில் கேரள மாநில அரசு தீவிரம் காட்டுவது சிறிதும் மனச்சான்றற்றச் செயலாகும். இந்தியக் கட்சிகளான காங்கிரசு, கம்யூனிஸ்ட் என்று எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முல்லைப்பெரியாறு அணையை உடைக்க முயல்வது இந்திய ஒருமைப்பாட்டை கேலிக்கூத்தாக்கும் செயலாகும். 

காங்கிரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ள திமுக, தமிழ்நாட்டு உரிமை பறிபோவதை வேடிக்கைப்பார்ப்பதும்,  திராவிடம், திராவிடம் என்று கூறிக்கொண்டு கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிடம் பறிபோகும் தமிழ்நாட்டு உரிமையைப் பெற முடியாமல் மாறி மாறி மண்டியிட்டு அடிபணிவதும் வெட்கக்கேடானதாகும். ஆகவே, முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டும் கேரள அரசின் சூழ்ச்சியைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தைத் தொடங்க வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார். 

Mullaperiyar : கேரளாவிற்கு செக் வைத்த தமிழகம்.! சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு கூட்டம் திடீர் ரத்து
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios