நாகப்பட்டினம்

திரிபுரா மாநிலத்தில் அமைதியை நிலை நிறுத்த கோரி நாகப்பட்டினத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் 32 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து அங்கு லெனின் சிலை உடைக்கப்பட்டது. இதனைக் கண்டித்தும், திரிபுரா மாநிலத்தில் அமைதியை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரியும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம் தலைமை அஞ்சலகம் முன்பு நடைப்பெற்ற இந்தப் போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் நாகை மாவட்டத் தலைவர் (தெற்கு) என். அக்பர் அலி தலைமை வகித்தார். 

எஸ்டிடியு மாவட்டத் தலைவர் சாதிக், எஸ்டிபிஐ மாவட்டப் பொதுச் செயலாளர் பாபுகான், சட்டப்பேரவைத் தொகுதித் தலைவர்கள் அபுஹாசிம், மெய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை நாகப்பட்டினம் நகர காவல் நிலைய காவலாளர்கள் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.