Asianet News TamilAsianet News Tamil

பசங்க பட பாணியில் மாணவனின் உயிரை காப்பாற்றிய ஆசிரியர்கள்…. நம்பிக்கை வார்த்தைகளால் உயிர் மீண்ட சிறுவன்… நெகிழ்ச்சி சம்பவம் !!

School teachers save a student serius in hospital
School teachers save a student serius in hospital
Author
First Published Jul 21, 2018, 12:57 PM IST


உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் ஒருவனின் உயிர் பிரியும் கடைசி தருணத்தில் அவனது ஆசிரியர்களின்  நம்பிக்கை மிகுந்த பேச்சால் உயிர் பிழைத்த நெகிழ்ச்சியான சம்பவம் புதுக்கோட்டை அருகே நிகழ்ந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் அருண் பாண்டியன், ஒரு கூலித் தொழிலாளியின் மகன்.

மின்னாத்தூர் கிராமத்திலிருந்து  நாள்தோறும் கந்தர்வக் கோட்டையில் உள்ள பள்ளிக்கு தினமும் வந்து செல்கிறான். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் வழக்கம் போல் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல பேருந்து நிலையம் சென்ற மாணவன் அருண்பாண்டியன் சக நண்பர்களுடன் சேர்ந்து பானிபூரி சாப்பிட்டுள்ளான். சாப்பிடும் போதே அப்படியே மூச்சடைத்து மயங்கி சரிந்தான்.

School teachers save a student serius in hospital

இதையடுத்து, அருண்பாண்டியனை சக மாணவர்கள் கந்தர்வகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பணி மருத்துவர், நாடித்துடிப்பு மிகக்குறைவாக உள்ளதால், தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லவேண்டும் எனக்கூறி 108 ஆம்புலன்சையும் வரவைத்து ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் அனுப்பிவைத்துள்ளனர்.

ஆம்புலன்ஸில் இருந்த நர்ஸ் மாணவனின் மூச்சுத் திணறலை குறைக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்க 15 நிமிடத்தில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் நிறுத்தினார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர். தொடர்ந்து மாணவனை கூட வந்த சக மாணவர்களுடன் ஆம்புலன்ஸ் நர்ஸ் வேகமாக சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தார். அங்கிருந்த மருத்துவர்கள் முதல்கட்ட சோதனை செய்து நாடித்துடிப்பு ரொம்ப குறைந்துவிட்டது. ஆக்ஸிஜனை எடுத்துவிட்டால் உயிர் பிழைக்க முடியாது என கூறியவுடன், சக மாணவர்கள் கதறி அழுதனர்.

இந்நிலையில்  கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சோமசுந்தரத்திற்கு கையில் சிறு காயம் ஏற்பட அவரை ஆசிரியர் மணிகண்டன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

அப்போது அங்கிருந்த பணி மருத்துவர் உங்கள் பள்ளி மாணவன் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம் என்று தகவல் சொல்ல காயத்திற்கு மருந்து கட்டுவதை மறந்து இரு ஆசிரியர்களும் தஞ்சை வந்து சேர்ந்தனர்.

அங்கு மாணவன் அருண்பாண்டியன் சிகிச்சை பெறும் அவசர சிகிச்சைப் பிரிவில் சென்று பார்த்த போது  அதிர்ந்து விட்டனர். உடனடியாக மாணவன் காதருகே சென்று முதலில் மணிகண்டன்.. தம்பி முழிச்சுப் பார் யா.. யார் வந்திருக்கிறது என்று அடுத்தடுத்து பேச்சுக் கொடுக்க அதுவரை அசைவற்றுக் கிடந்த மாணவனின் கண்கள் லேசாக உருளத் தொடங்கியது.

School teachers save a student serius in hospital

அதைப் பார்த்த பிறகு மறுபடியும் இரு ஆசிரியர்களும் மாணவனிடம் அடுத்தடுத்து பேசப் பேச மாணவன் கண் விழித்தான் கை, கால்களை அசைத்தான்.. உனக்கு ஒன்றும் இல்லை நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கை ஊட்டி பேச பேச 7 நிமிடங்களில் சுய நினைவு பெற்றவனாக, சார் நீங்க எப்ப வந்தீங்க என்று கேட்க.. எங்களை தெரியுதா என்று ஆசிரியர்கள் கேட்க.. மணிகண்டன் சாரும், சோமு சாரும் என்று தெளிவாக சொன்னான். இதை எல்லாம் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர்களும் செவிலியர்களும் ஆனந்தமடைந்து 10 சதவீதம் கூட உயிர் இல்லாமல் இருந்தான் இப்ப பிழைச்சுக்கிட்டான் என்று கூறினார்கள்.

அதுவரை கதறிக் கொண்டிருந்த பெற்றோரும் கண்ணீரை நிறுத்திவிட்டு ஆசிரியர்களின் கைகளை பற்றிக் கொண்டு அந்த இருவருக்கும் நன்றி சொன்னார்கள். ஆசிரியர்கள் இருவரின் செயலை கேள்விப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மாணவ-மாணவிகள் அவர்கள் இருவருக்கும் நேரிலும், போன் மூலமும் நன்றியும் வாழ்த்தும்  தெரிவித்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios