பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியின் ஹால் டிக்கெட்டை சகமாணவர்கள் கிழித்தெறிந்ததால் அவமானத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது. மாணவியின் சாவுக்கு சக மாணவர்கள்தான் காரணம் என்று போலீசில் புகார் கூறியுள்ளனர் மாணவியின் பெற்றோர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, தேவீரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் நிவேதா. இவர், அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நிவேதா, இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி நிவேதாவின் தற்கொலைக்கு இரண்டு மாணவர்கள்தான் என்று நிவேதாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், பள்ளியில் சிறப்பு வகுப்பு நடைபெற்றிருக்கிறது. சிறப்பு வகுப்பில் கலந்து கொண்ட பிறகு வெளியே வந்த நிவேதாவை, சக மாணவர்களான பசுபதி மற்றும் சந்தன பாண்டியன், மாணவியின் ஹால்டிக்கெட் மற்றும் புத்தகங்களை வாங்கி கிழித்தெறிந்துள்ளனர். ஹால்டிக்கெட் கிழித்தெறியப்பட்டதில் மாணவி நிவேதா அவமானத்தில் மூழ்கியுள்ளார்.

வீட்டுக்கு வந்த நிவேதா, இது குறித்து பெற்றோரிடம் கூறி வேதனைப்பட்டுள்ளார். மீண்டும் தேர்வு எழுத முடியாத வேதனையாலும், ஹால்டிக்கெட் கிழிக்கப்பட்ட அவமானத்திலும் மன உளைச்சலுக்கு ஆளான நிவேதா இன்று காலை வீடடில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இது குறித்து, மாணவியின் பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.