மாணவி தற்கொலை.. மதமாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தியதாக புகார்..வார்டன் திடீர் கைது.. தஞ்சையில் பரபரப்பு..
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் ஆசிரியர் மதமாற்றம் செய்ய சொன்னதாகவும், மறுத்ததால் அதிகமாக வேலையை வாங்கியதாகவும் அந்த மாணவி பேசும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் தஞ்சாவூரில் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைபள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். மேலும் பள்ளிக்கு அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் மாணவி தங்கியிருந்து படித்து வந்திருக்கிறார்.இந்நிலையில் கடந்த 9ம் தேதி மாணவி உடல்நலக்குறைவு காரணமாக வாந்தி எடுத்ததாகவும் வயிற்றுவலி என்று கூறியதால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் பள்ளி நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டு, மறுநாள் மாணவியின் தந்தை வந்து மகளை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் மாணவிக்கு உடல் நிலை சரியாகாமல் மேலும் மோசமடைந்ததால் கடந்த 15ம் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு தன்னை பரிசோதித்த மருத்துவர்களிடம் மாணவி , தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதன் பேரில் ஏற்பட்ட மன உளைச்சலால் பூச்சி மருந்தை குடித்ததாகவும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு,போலீசார் மாணவியிடம் விசாரித்தனர்.
இதற்கிடையில் மாணவி பேசிய ஒரு வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “என்னை பள்ளி நிர்வாகம் மதமாற்றம் செய்யக் கூறியது. அதற்கு அம்மாவும் அப்பாவும் ஒத்து வராததால், பள்ளியில் என்னை துன்புறுத்தி வேலை வாங்கினர்” என மாணவி பேசியிருந்தார். இந்த சூழலில் மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுப்பட்ட உறவினர்களுடன் பாஜக சார்பில் பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் இணைந்தனர். மேலும் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், “மாணவியின் மரணத்திற்கு காரணமான ஆசிரியை ராக்கிலின்மேரி என்பவரை கைது செய்ய வேண்டும், அந்த பள்ளியை மூட வேண்டும். இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்” என்றார். இதுகுறித்து தஞ்சை எஸ்பி ரவளி பிரியாவிடம் மனு கொடுத்து, ‘உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்திருந்ததாகவும், ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததாகவும் தெரிவித்தார்.அந்த மனுவில், “காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில், ‘மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் மாணவி உயிரிழந்தார்’ என வழக்கை மாற்ற வேண்டும், மேலும் இதற்கு காரணமான ஆசிரியரை கைது செய்ய வேண்டும், பள்ளியை உடனடியாக மூட வேண்டும்” என குறிப்பிடப்படப்பட்டிருந்தது.இந்நிலையில் தற்போது காவல்துறையினர் வார்டன் சகாயமேரியை (வயது 62) கைது செய்துள்ளனர். இச்சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில், அரியலூர் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை மதம் மாறச் சொல்லி, பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.பள்ளியின் ஹாஸ்டலில் தங்கி இருந்த மாணவி, மரணத்திற்கு முன், பேசிய வீடியோ பதிவு, மனதைப் பதறவைக்கும். நடுநிலையான விசாரணை நடைபெற்று, தவறு செய்தவர், கைது செய்யப்பட வேண்டும். உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி உதவியும், அரசு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும். மதமாற்றம் என்பது தமிழகத்திலே வேகமாக பரவுகின்ற ஒரு விஷச்செடி. ஏழை மக்களை துன்புறுத்தி இது போன்ற காரியங்கள் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு மாநில அரசு கவனம் கொடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் என்று அந்த வீடியோவை பதிவிட்டு குறிப்பிட்டிருந்தார்.