மாநகர பஸ் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவன் சாலையோர மின்சார பில்லர் பாக்ஸ்சில் உரசி கீழே விழுந்தபோது, பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். தனியார் தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறார். இவரது மகன் கபிலன் (14). திருவொற்றியூரில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மாலை பள்ளி முடிந்தது கபிலன், திருவொற்றியூர் தேரடியில் இருந்து மாதவரம் செல்லும் மநகார பஸ் (தஎ 56டிபுள்யு) மூலம் வீட்டுக்கு புறப்பட்டார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால்,சிறுவன் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தான்.

ஏகவல்லி அம்மன் கோயில் தெரு அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் இருந்த மின்சார பில்லர் பாக்ஸ்சில் சிறுவன் உடல் உரசியதில் கீழே விழுந்தான். அப்போது, அதே பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தான்.

தகவலறிந்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். உடனே அப்பகுதி பொதுமக்கள், போலீசாரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மெட்ரோ ரயில்  பணியால் குறுகிவிட்டது. இங்கு சாலையோரத்தில் மின்சார  டிரான்ஸ்பார்மர் மற்றும் பில்லர் பாக்ஸ் இருப்பதால் பஸ் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள், அதில் மோதி விபத்தை சந்திக்கின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள டிரான்ஸ்பார்மர் மற்றும் பில்லர் பாக்ஸ்களை உடனடியாக அகற்ற வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்றனர்.

பின்னர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதைதொடர்ந்து போலீசார், சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவத்தால், வண்ணாரப்பேட்டையில் இருந்து எர்ணாவூர் வரை சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.