விருதுநகர்

உரிமம் இல்லாமல் செயல்படும் பள்ளி, மருத்துவமனை, உணவகங்கள் போன்ற பல்வேறு கட்டிடங்களுக்கு தடை விதிக்கப்படுவதுடன், கட்டிட உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் ஆட்சியர் சிவஞானம் நேற்று செய்தியறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், “தமிழ்நாடு பொதுக் கட்டிட உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், மாணவர் விடுதிகள், நூலகங்கள், மருத்துவமனைகள், சங்கங்கள், மருந்தகங்கள், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் மற்றும் வணிக நோக்கத்திற்காக பயன்படுபவை மற்றும் மக்களின் பயன்பாட்டில் உள்ள அனைத்துத் தனியார் மற்றும் பொதுக்கட்டிடங்களும் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

இதுநாள் வரை உரிமம் பெறவில்லை என்றால் உடனடியாக சம்பந்தப்பட்ட தாசில்தார்களை அணுகி பொதுக் கட்டிடங்கள் உரிமம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்டிடப் பொறியாளரால் வழங்கப்பட்ட கட்டிட உறுதிச்சான்று, பொதுச் சுகாதாரத் துறையினரிடம் இருந்து பெறப்பட்ட சுகாதாரச் சான்று, உள்ளாட்சி அமைப்பு மற்றும் இதர அங்கீகாரம் பெற்ற துறைகளிடம் பெறப்பட்ட கட்டிட வரை படம், தீயணைப்புத் துறையினரின் தடையில்லாச் சான்று ஆகிய ஆவணங்களுடன் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

தாசில்தார்கள் ஆய்வு செய்து சான்றுகளை பரிசீலித்து உரிமம் வழங்குவர். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்படி உரிமத்தை தவறாமல் புதுப்பிக்க வேண்டும்.

உரிமம் பெறாமல் எந்த கட்டிடத்தையும் பொதுக் கட்டிடமாக பயன்படுத்தக் கூடாது. உரிமம் பெறாமலோ, காலாவதியான உரிமத்துடனோ பொதுக் கட்டிடங்கள் செயல்பட்டால் தடை செய்யப்படுவதுடன், கட்டிட உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதில் தெரிவித்துள்ளார்.