கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கு.. கைதான பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் ஜாமினில் வெளியே வந்தனர்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் செயல்பட்டு வரும் சக்திப் பள்ளியில் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி மரணமடைந்தார். இதனை தொடர்ந்து மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
இந்த போரட்டம் ஜூன் 17 ஆம் தேதி வன்முறையாக வெடித்தது. இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டது. மேலும் வன்முறை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க:மக்களே உஷார் !! 4 நாட்களுக்கு விடாது ஊற்றப் போகும் மழை.. இன்று 16 மாவட்டங்களில் கனமழை
மாணவி மரண வழக்கு தொடர்பாக பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், இரு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி பள்ளி நிர்வாகிகள் உட்பட 5 பேருக்கும் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகிய மூவரும் மதுரையிலும் இரு ஆசிரியைகள் சேலத்திலும் தங்கியிருந்து கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன்படி தற்போது, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளி தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன் , பெண்கள் தனிக்கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளி செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய மூவரும் இன்று ஜாமினில் வெளிவந்தனர்.
மேலும் படிக்க:ஷாக்!! ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு.. டிக்கெட் முன்பதிவு குறித்து வெளியான தகவல்..
முன்னதாக மாணவியின் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஆய்வு செய்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையின்படி, மாணவி ஸ்ரீமதியின் முதல் உடல் கூராய்வுக்கும், இரண்டாவது உடல் கூராய்வுக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை என்றும் மாணவி பாலியல் பலாத்காரமோ, கொலையோ செய்யப்படவில்லை என்றும் நீதிபதி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.