காலை உணவு திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் வருகிற 25 ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  

காலை உணவு திட்டம்

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ஏழ்மையான மாணவர்கள் படிப்பை இடை நிற்றலை தடுக்கும் வகையில் மதிய உணவு திட்டமானது காமராஜரால் தொடங்கப்பட்டு எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என தமிழகத்தில் ஆட்சி புரிந்த முதலமைச்சர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த மதிய உணவு திட்டத்தின் அடுத்த கட்டமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் அறிமுகம் செய்தார்.

தமிழகம் முழுவதும் காலை உணவு திட்டம்

முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும். 1545 அரகப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்க பள்ளி (1 முதல் 5ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை 2022-2023-ஆம் ஆண்டில் முதற்கட்டமாகச் செயல்படுத்திட ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தமிழ்நாட்டில் நகர்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு விரிவுபடுத்தப்படவுள்ளதாக மு க ஸ்டாலின் சுதந்திர தின விழாவில் நேற்று அறிவித்தார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் 25.08.2023 அன்று விரிவுபடுத்தப்பட்ட இத்திடத்தை முதலமைச்சர் துவக்கிவைக்கிறார்.

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அதே நாளில் அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் சார்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் மூலம் ஆயத்த பணிகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் வரைவினை பெற்று அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்(தொடக்கப்பள்ளி) தங்கள் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.