நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிப்.19 ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், 50%க்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு சென்றால், அந்த பள்ளிகளுக்கு மட்டும் பிப்.18ஆம் தேதியும் விடுமுறை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் பிப்.,19 ஆம் தேதி பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புக்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் 22 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

இத்தேர்தலில் 31 ஆயிரத்து29 வாக்குச் சாவடிகள் இடம்பெற்றுள்ளன. அதிகபட்சமாக சென்னைமாநகராட்சியில் 5 ஆயிரத்து 794வாக்குச் சாவடிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் என மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரம் அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு வாக்காளர்களின் வாக்காளர் அட்டையை பரிசோதித்தல், வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுதல் உள்ளிட்ட பயிற்சிகளும் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டன.

மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான பிப்.19-ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் , நகர்ப்புற தேர்தல் வாக்குப்பதிவு அன்று வாக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு விடுப்பு தர வேண்டுமென்றும், வாக்குப்பதிவு அன்று விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு சம்பள பிடித்தம் சம்பளக் குறைப்பு இருக்கக்கூடாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தேர்தலின் போது வாக்குபதிவு அலுவலர்களாக ஆசிரியர்கள் ஈடுப்படுவதாலும், பெரும்பாலும் பள்ளிகளிலே வாக்குபதிவு மையங்கள் அமைக்கப்படுவதாலும் தேர்தல் அன்றும் பிப்.,19 ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. 

அதில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிப்.19 ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், 50%க்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு சென்றால், அந்த பள்ளிகளுக்கு மட்டும் பிப்.18ஆம் தேதியும் விடுமுறை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.