Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் ஆன்லைன் வகுப்பு..? பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை..வெளியான புது உத்தரவு..

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
 

School Education Department New Announcement
Author
Tamilnádu, First Published Jan 29, 2022, 7:30 PM IST

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல்  பள்ளிகள் திறக்கப்படவில்லை. கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை ஓய்ந்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வழியாக கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பரில் பெரும்பாலான நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பருவமழை ஓய்ந்து டிசம்பர் மாதத்தில் இருந்தாவது நேரடி வகுப்புகளை நடத்தலாம் என பள்ளி நிர்வாகங்கள் திட்டமிட்டிருந்தபோது, கொரோனா மூன்றாவது அலை தீவிரமடைய தொடங்கியது.

இதனையடுத்து, ஜனவரி 5 ஆம் தேதி  முதல் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பின்னர் 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு   ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டது. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த  திருப்புதல் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது.   

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு குறைந்த வரும் நிலையில், பிப்ரவரி 1 ம் தேதி  முதல்  1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும்,  கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதியும்,  வீடுகளில் முடங்கியிருக்கும் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது  பிப்.1 ஆம் தேதி  பள்ளிகள் திறக்கப்பட்டாலும், மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என பள்ளிக்கல்வித்துறை  தெரிவித்துள்ளது.  மேலும் நேரடி அல்லது ஆன்லைன் முறையிலேயே வகுப்புகள் நடத்துவது  என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களின் திருப்புதல் தேர்வு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகிறது.இவற்றை கருத்தில் கொண்டு பிப்ரவரி 18 முதல் 22 ஆம் தேதி வரை தொடர்ந்து ஐந்த நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குச்சாவடிகள் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் அமைக்கப்படுவதாலும், தேர்தல் பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாலும் அந்த விடுமுறை தவிர்க்க இயலாததாகிறது என்று துறை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios