school correspondent arrested due to raped a girl

சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்க்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மகள் மணிமாலா (14). அதை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர்களது உறவினர் சரவணன். நெற்குன்றம் பகுதியில் தனியார் பள்ளி நடத்தி வருகிறார். தினமும் மணிமாலா, மாலையில் பள்ளி முடிந்ததும், சரவணன் வீட்டுக்கு செல்வார். பின்னர், அங்கிருந்து தனது வீட்டுக்கு செல்வார்.

இந்நிலையில், கடந்த 29ம் தேதி வீட்டில் இருந்த மணிமாலா, சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து அவர் அலறி துடித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், உடல் முழுவதும் தீக்காயம் அடைந்த மணிமாலாவை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

புகாரின்படி கோயம்பேடு மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்ததாக போலீசார் கூறினர். சிறிது நேரத்தில், மணிமாலா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதைதொடர்ந்து மணிமாலா வீட்டில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, அவர் எழுதி வைத்த பரபரப்பு கடிதம் சிக்கியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதைதொடர்பாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

 மணிமாலா மாலையில் பள்ளி வகுப்பு முடிந்து, வீட்டுக்கு செல்லும்போது உறவினர் சரவணன் வீட்டுக்கு செல்வது வழக்கம். அப்போது, சாந்தி மீது சரவணனுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது.

கடந்த 6 மாதத்துக்கு முன், சரவணன் வீட்டுக்கு மணிமாலா சென்றார். அப்போது சரவணன், மயக்க மருந்து கலந்த காபி கொடுத்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், இதுபற்றி யாரிடமும் சொல்ல கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.

ஆனால், மணிமாலா, தந்தை பழனிவேலுவிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ‘உறவினராகி விட்டாரே என்ன செய்வது’ என்று தட்டிக்கேட்கவில்லை. இதையடுத்து அவரது வீட்டுக்கு செல்வதை மாணவி மணிமாலா தவிர்த்து வந்தார்.

இதனால், ஆத்திரமடைந்த சரவணன், மணிமாலாவிடம் உன்னுடைய வீடியோ காட்சிகள் என்னிடம் இருக்கிறது. அதை வாட்ஸ்அப்பில் போட்டுவிடுவேன் என மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதற்கு சரணவனின் மனைவியும் உடந்தையாக இருந்தார்.

இந்நிலையில், 10ம் வகுப்பு கடைசி பொது தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த சரவணன் மீண்டும் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், மனமுடைந்த மணிமாலா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சிகிச்சையின் போது மணிமாலா அளித்த வாக்குமூலம் மட்டுமின்றி அவர், பெற்றோருக்கு எழுதிய கடிதமும் சிக்கியுள்ளது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

மாணவி மணிமாலா இறந்ததை அறிந்ததும், சரவணன் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார். போலீசார், அவரை வலைவீசி தேடி வந்தனர்.

இதை தொடர்ந்து, சரவணனையும், அவரது மனைவியையும் கைது செய்ய கோரி, மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 100க்கு மேற்பட்டோர், நேற்று காலை நெற்குன்றத்தில் சரவணன் நடத்தி வரும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், சரவணன் நடத்தும் பள்ளியில் வேலைக்கு சேரும் பலர், சில மாதங்களிலேயே வேலைவிட்டு செல்கின்றனர். அவரது தவறான செயலை இதுவரை யாரும் வெளியே சொல்லவில்லை.

இதனை போலீசார் தீவிரமாக விசாரித்து அவரை, கைது செய்து உரிய தண்டனை தர வேண்டும் என்றனர்.

தகவலறிந்து, மதுரவாயல் துணை தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் வரதராஜன் மற்றும் கோயம்பேடு மார்க்கெட் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதற்கிடையில், சென்னை புறநகர் பகுதியில் தலைமறைவாக இருந்த சரவணனை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.