School Administration Executive Union Resolution to continue the old pension scheme...

இராமநாதபுரம்

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை தொடரவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

இராமநாதபுரம் பள்ளிக்கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதற்கு சங்க ஆலோசகர் ஜோசப் அண்டோன் பெர்ணான்டோ, மாவட்ட பிரசார செயலாளர் சுந்தரசேன், மாவட்ட அமைப்பு செயலாளர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில துணை தலைவர் கோவிந்தராஜன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் செயலர் அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் வரவு செலவு அறிக்கை வாசித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாநிலத் தலைவர் நீதிமணி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், முன்னாள் மாநில தலைவர் ராஜேந்திர பிரசாத், மாநில பொருளாளர் முருகன், மாநில அமைப்பு செயலாளர் குலாம் ரபீக் உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் , மாநில செயற்குழு உறுப்பினர் குமரேசன் நன்றி தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், "பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை தொடரவேண்டும்,

நீதிமன்ற வழக்குகளில் சட்ட சிக்கல்களை தவிர்க்கும் வகையில் மாவட்டந்தோறும் சட்ட அலுவலர்கள் நியமனம் செய்ய வேண்டும்.

துப்புரவு பணியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,

அனைத்து பணியாளர்களுக்கும் கணினி வசதி செய்து கொடுத்து பயிற்சி அளிக்க வேண்டும்.

அரசின் பல்வேறு நலத்திட்ட பணிகளை நிறைவேற்ற கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும்,

மாவட்ட அளவில் விலையில்லா பாடநூல்கள் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களை பாதுகாப்பாக வைக்க மாவட்டந்தோறும் கிடங்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்.

தேர்வு பணிகளை கவனிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கும் கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும்" போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.