வேலூர்

திருப்பத்தூரில் கிணற்றுக்கு வைத்த வெடியால் வெடித்து சிதறிய பாறை கற்கள் ஆறு வயது சிறுமியின் தலையில் விழுந்ததால் பலத்த காயமடைந்தார். வெடி வைத்தவர் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த கொரட்டி தண்டுக்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் சென்னப்பனின் மகள் கிருத்திகா (6). இவர் அதே பகுதியில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலைக்கு (52) சொந்தமான விவசாய கிணற்றில் உள்ள பாறைக்கு வெடி வைத்தனர்.

அப்போது அந்த வழியாகச் சென்ற சிறுமி கிருத்திகா தலைமீது வெடித்து சிதறிய பாறைக் கற்கள் விழுந்தன. இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, சிறுமி கிருத்திகா திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்த திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதன்படி வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. பின்னர், அண்ணாமலையை காவலாளர்கள் கைது செய்தனர். மேலும், கிணற்றுக்கு வெடிவைத்த தொழிலாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.