SC Extends Voter ID Registration Deadline in Tamil Nadu: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாட்கள் கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் S.I.R எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முதலில் ஜனவரி 19ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பின்பு ஜனவரி 30ம் தேதி வரை (நாளை) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

மேலும் 10 நாட்கள் கால அவகாசம்

இதற்கிடையே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் வழங்கக்கோரி திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாட்கள் கால அவகாசம் வழங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் அதிரடி

வாக்காளர் பட்டியலில் முரண்டுபாடுகள் உள்ளவர்கள் என கண்டறியப்பட்டவர்களின் பெயர்களை தாலுகா அலுவலகங்கள், பஞ்சாயத்து அலுவலங்கள் என அரசு அலுவலகங்களில் வெளியிட வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை முறையாகப் பின்பற்றி, இதற்காகத் தனிப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இந்தச் செயல்முறையில் எந்தவித சட்டம்-ஒழுங்கு சிக்கலும் ஏற்படாமல் இருப்பதை டிஜிபி மற்றும் காவல்துறை ஆணையர் உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தை ‍போல் தமிழ்நாட்டுக்கும் நீட்டிப்பு

மேற்கு வங்க மாநிலத்திலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கியிருந்த நிலையில், இப்போது தமிழ்நாட்டுக்கும் வழங்கியுள்ளது. ஆகவே சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டவர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்க விண்ணப்பிக்கவில்லை என்றால் இப்போது பெயர்களை சேர்க்க நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது.