சென்னையில் கொலை செய்யப்பட்ட துண்டு துண்டாக வெட்டப்பட்ட துணை நடிகை சந்தியாவின் தலையை 2-வது நாளாக தேடியும் கிடைக்கவில்லை. இதனால் போலீசாருக்கு இந்த வழக்கு பெரும் தலைவலியாகி உள்ளது.

கடந்த மாதம் 20-ம் தேதி பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் இரண்டு கால்கள் மற்றும் கை ஒன்று கிடந்தது. அதை கைப்பற்றி பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தினர். பல்வேறு தொடர் விசாரணைக்கு பிறகு கடந்த 6-ம் தேதி கொலை செய்யப்பட்ட பெண் சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணனின் மனைவி சந்தியா என்று தெரியவந்தது. 

இதையடுத்து அதிரடியாக பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி காசி திரையரங்கம் அருகே உள்ள அடையாறு ஆற்றின் பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து சந்தியாவின் இடுப்பு பாகத்தை கைப்பற்றினர். ஆனால் சந்தியாவின் தலை மற்றும் மார்பு பகுதி மட்டும் கிடைக்கவில்லை. இதனால் கொலை செய்யப்பட்ட நபர் சந்தியாதான் என்று உறுதி செய்ய முடியாத நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டனர்.

 

வழக்கில், சந்தியாவின் தலையை கண்டுபிடித்தாக வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டது. இதனால், போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அடையாறு ஆற்றில் தேடினர். ஆனால் தலை கிடைக்கவில்லை. பின்னர் போலீசார் கை மற்றும் கால்கள் கிடைத்த பெருங்குடி குப்பை கிடங்கில் தலை இருக்கலாம் என்று கருதினர். அதன்படி நேற்று முன்தினம் முதல் பள்ளிக்கரணை உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு தலைமையில் 6 இயந்திரம் மற்றும் 30க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் தேடுதல் பணி நடந்து வருகிறது. 

இரண்டாவது நாளான நேற்று பெருங்குடி குப்பை கிடங்கில் 7 அடி ஆழம் 50 மீட்டர் அகலம் மற்றும் 25 மீட்டர் நீளத்திற்கு அங்குலம் அங்குலமாக 6 இயந்திரத்தின் உதவியுடன் தேடினர். ஆனாலும் சந்தியாவின் தலை கிடைக்கவில்லை. இதனால் போலீசார் பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனிடையே இதுவரை மீட்கப்பட்ட பாகங்கள் அனைத்தும் கொலையான பெண்ணின் உடல் தானா என மரபணு சோதனை நடத்த திட்டமிட்டுள்ள போலீசார், அவரது பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உடலில் திசுவை எடுத்து மரபணு சோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் பாலகிருஷ்ணனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.