சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டை கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் என்னை தவிர மற்ற 8 பேர் தான் அடித்து கொலை செய்தனர் என்று எழுதியுள்ளார்.
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டை கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் என்னை தவிர மற்ற 8 பேர் தான் அடித்து கொலை செய்தனர் என்று எழுதியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு விசராணைக்காக காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டு, போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த இரட்டை கொலை வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். பின் அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், பணியிலிருந்த போலீசார் என 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கொரோனாவால் உயிரிழந்தார்.
இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், தன்னை தவிர்த்து மற்ற 8 பேருமே கொலையை செய்ததாக மதுரை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கடிதம் எழுதியுள்ளார்.
இதன்படி சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்சை தன்னை தவிர மீதி உள்ள எட்டு பேரான ஏ2 முதல் ஏ 9 வரை குற்றம் சட்டப்பட்டவர்களே அடித்துக் கொன்றனர் என்றும், ஏன் அவர்களை சாகும் வரை அடித்துக் கொன்றீர்கள் என்று கேட்டதற்கு, தன்னை மார்ச் 26 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு சிறையில் கொலை செய்ய முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கொலை முயற்சி செய்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது என்றும், இதனடிப்படையில் விசாரணை நடத்தி வழக்கில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் நீதிமன்றம் அழைத்து வரும் போதெல்லாம் என்னை தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர். அதனால், நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது என்னை தனி வாகனத்தில் அழைத்து வர உத்தரவு விடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
