திருத்தணி

தொடர்ந்து கிழிக்கப்பட்டு வரும் சசிகலாவின் பேனர் பட்டியலில் இன்னுமொரு பேனரும் கூடியது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொதுச்செயலாளர் ஆவதற்கு முன்பே, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட சசிகலா ஆதரவு பேனரை மக்கள் கிழித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதிலிருந்து, அதிமுகவின் தலைமையில் ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது என்றும், ஜெயலலிதாவின் இடத்தை சசிகலாவுக்கு தர விருப்பம் இல்லை என்பதையும் மக்கள் இந்த பேனர் கிழிப்பு மூலம் தெரிவித்தனர்.

மேலும், அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் (உண்மையான தொண்டர்கள்) அனைவரிடமும் எந்தவித கருத்தையும் கேட்காமல் தலைமையில் இருப்போர் தன்னிச்சையான இந்த முடிவை எடுத்திருக்கின்றனர் என்று அவ்வப்போது கிளம்பும் எதிர்ப்புகளும், கட்சியை விட்டு விலகும் தொண்டர்களின் மனநிலையும் உணர்த்துகிறது.

இதன் தொடர்ச்சியாக சசிகலாவின் முகத்தில் சாணி வீசுவது, சசிகலாவின் முகத்தை கிழிப்பது என பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு வாழ்த்துகள் எதிர்மறையாக குவிகிறது.

பேனர் கிழிக்கப்பட்டது என தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. நிர்வாகிகள், கிழக்கப்பட்ட பேனரை உடனடியாக அகற்றி விடுகின்றனர். மறுபடியும் இன்னொரு பேனர் வேறொரு இடத்தில் வைக்கப்படுகிறது. அதுவும் மக்களால் கிழிக்கப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட பரபரப்புகள் அடங்கும் முன்பு, சசிகலாவிற்கு ஆதரவாக திருத்தணியில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களிலும் சசிகலா உருவப்படங்கள் கிழிக்கப்பட்டிருந்தன.

மர்ம நபர்கள் போர்வையில் அதிமுகவினர் சிலரே இந்த செயலை செய்கின்றனர் என்றும் செய்திகள் பரவுகிறது.

எதுவாக இருந்தாலும், அவர்களுக்கும் சசிகலாவின் தலைமை பிடிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

சசிகலாவுக்கு ஆதரவாக பேனர்கள் வைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. மக்கள் அதற்கு சாணி அடித்தும், பேனரை கிழித்தும் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பேனருக்கே இந்த நிலைமை என்றால், சசிகலா நேரில் சென்றால்!!!