செந்துறை,
தனக்கு பெரும்பான்மையான அ.தி.மு.க எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது என கூறும் சசிகலா, எம்.எல்.ஏக்களை பேருந்துகளில் சுற்ற வைத்தது அருவெருக்கத்தக்க அரசியல் என்று செந்துறையில் நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“இந்த கொலைச் சம்பவத்தை சாதி, மத ரீதியாக பார்க்கக் கூடாது. இதனை சமூக ரீதியாக பார்க்க வேண்டும்.
மதுபோதையால் சீரழிந்து வரும் இந்த சமூகத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும். இந்த கொலையை தேசத்தின் அவமானமாக கருத வேண்டும்.
தனக்கு பெரும்பான்மையான அ.தி.மு.க எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது என கூறும் சசிகலா, எம்.எல்.ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைத்து பேருந்துகளில் சுற்ற வைத்தது ஏன்? என்பது தெரியவில்லை.
இது ஜனநாயகத்திற்கு விரோதமான அருவெருக்கத்தக்க அரசியலை தான் காட்டுகிறது.
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலாவும் தனித்தனியாக சந்தித்து பேசிய பின்னர் கவர்னர் முடிவு எடுக்க காலம் தாழ்த்துவதற்கு குழப்பமான அரசியல் சூழ்நிலையே காரணம் ஆகும். இதனால் தான் அவர் அவகாசம் அளிக்கிறார் என்று அவர் தெரிவித்தார்.
