santhosh jayakumar reply Lakshmy Ramakrishnan comments about Iruttu Araiyil Murattu Kuththu

சேனலில் உட்கார்ந்துகொண்டு, ஒரு குடும்பத்தில், கணவனுக்கு கள்ளத்தொடர்பு இருக்கு. மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருக்கு என்று நிகழ்ச்சி நடத்துவதை எத்தனை எவ்வளவோ சின்ன குழந்தைகள் பார்க்கிறார்கள் என இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்விக்குக் கடுமையான பதில் அளித்திருக்கிறார் இருட்டு அறையில் முரட்டுக் குத்து இயக்குநர் சந்தோஷ்.

சமீபத்தில் வெளியாக இளைஞர்கள் மத்தியில் நல்ல பெயரும், பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனமும் பெற்ற திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து. திரைப்பிரபலங்கள் பலரும் அந்த படத்தை கடுமையாக விமர்சித்த நிலையில் இயக்குநர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனும் காட்டமாக தனது விமர்சனத்தை முன் வைத்திருந்தார்.

இந்நிலையில், அவரது விமர்சனத்திற்குப் பதில் கூறும் விதமாக முன்னணி இணையதளத்திற்கு பேட்டியளித்த சந்தோஷ், “குடும்பத்தோடு பார்ப்பாயா... என்று கேட்டு இருக்கிறார்கள். நான் ஏற்கனவே சென்சார் ரூல்ஸ், சென்சார் சர்ட்டிபிகேட் அது என்னாங்றதை சொல்லிவிட்டேன். எந்த படத்த யார், யார் கூட பார்க்க வேண்டும் என்று தெரியுற வயசு இருக்குறவங்கதான் இந்தப் படம் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் ‘ஏ’ சர்ட்டிபிகேட் கொடுத்து இருக்கிறார்கள்” என்றார்.

மேலும் பேசிய அவர், “ஒரு சேனலில் உட்கார்ந்துகொண்டு, ஒரு குடும்பத்தில், கணவனுக்கு கள்ளத்தொடர்பு இருக்கு. மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருக்கு என்று இதை பொது வெளியில் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதை எத்தனை வீடுகளில் எவ்வளவோ சின்ன குழந்தைகள் பார்க்கிறார்கள். இது மாதிரியான பிரச்சினைகளை கவனிக்க நாட்டில் போலீஸ் இருக்காங்க, கோர்ட் இருக்கு, மெடிக்கல் பிரஃபசனல் கவுன்சிலர் இருக்காங்க.

இவர்களைத் தாண்டி நம்ம ஒரு டி.வி நிகழ்ச்சியில் பரந்த மனப்பான்மையுடன், பக்குவமாக நடத்துகிறோம் என்றால், என்னோட படத்தையும் அதே கண்ணோட்டத்தில் பார்க்கலாம் இல்லையா. உங்கள் நிகழ்ச்சியைச் சின்ன குழந்தைகள் முதற்கொண்டு பார்க்கிறார்கள்.
ஆனால் என் படம் திரையரங்கில் மட்டும்தான். 18வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே. நாங்கள் தொலைக்காட்சி உரிமைகூட வாங்கவில்லை. பாடல் ஏதும் டி.வி யில் ஒளிபரப்பப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

இதே போல ஏற்கனவே இவர் ஹரஹர மகாதேவிக்கும் எதிர்ப்புத் தெரிவித்து இருவருக்கும் இடையே கருத்து மோதல் வெடித்தது குறுப்பிடத்தக்கது.