sanipeyarchi function in thirunallar and kuchanur

இன்று காலை 10.01 க்கு சனிப்பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு மற்றும் தேனி மாவட்டம் குச்சனூர் சனி பகவான் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்தலை பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. எல்லா கிரகங்களுக்கும் பெயர்ச்சி உள்ளது என்ற போதிலும், சனிப்பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி முக்கியமானதாக கருதப்படுகிறது.

சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால், ஒவ்வொரு ராசியில் இருந்து இடம் பெயர இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதைத் தான் சனிப்பெயர்ச்சி என்கிறோம்.

அதன்படி இதுவரை விருச்சிக ராசியில் இருந்து வந்த சனி பகவான் இன்று காலை 10.01 மணிக்கு தனுசு ராசியில் பிரவேசிக்கிறார். இந்த பெயர்ச்சியை முன்னிட்டு சனி பகவான் தலங்களில் பக்தர்கள் திரண்டு வந்து சனீஸ்வரனை தரிசித்த வண்ணம் உள்ளனர்.

முன்னதாக தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சனீஸ்வர பகவான் உற்சவ மூர்த்தி தங்க காக்கை வாகனத்தில் நேற்று இரவு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதே போன்று தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வர பகவான் சுயம்பு வடிவில் உள்ளதால் தமிழகத்தில் சுயம்வு வடிவில் உள்ள ஓரே சனீஸ்வர பகவான் கோயில் என்ற பெருமையை இக்கோயில் பெற்றுள்ளது. 


இந்நிலையில் சனீஸ்வர பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு இக்கோவிலில் லட்சார்ச்சனை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இதையொட்டி பக்தர்கள் கோயிலுக்கு முன்பாக உள்ள சுரபி நதியில் புனித நீராடி உப்புபொறிகளை கொடி மரத்தில் இட்டும், காக்கை வடிவிலான பொம்மைகளை தலையை மூன்று சுற்று சுற்றியும், எள்தீபம் ஏற்றியும் தங்கள் ராசிக்கு சனிதோஷம் நீங்கிட வேண்டி நீண்ட வரிசையில் நின்று சனீஸ்வர பகவானை வழிபட்டு வருகின்றனர்.



தொடர்ந்து நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்களின் வருகையினால் குச்சனூர் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.