இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் கடுமையான மணல் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் பசுமை வீடுகள் உள்ளிட்ட அனைத்து அரசுத் திட்டங்கள் முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளில் மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தது. இவையனைத்தும் அரசு உத்தரவால் தற்போது மூடப்பட்டு விட்டன.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 2017- 2018 நிதியாண்டில் 52 ஆயிரத்து 371 தனிநபர் மானிய கழிப்பறைகளுக்கும், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் மற்றும் பசுமை வீடு திட்டம் மூலம் 6 ஆயிரத்து 584 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்குவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் நடராஜனும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமுதி மற்றும் கமுதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மணல் குவாரிகளை மூடியதால் மணல் தட்டுப்பாடும் மற்றும் வறட்சி நிலவுவதால் தண்ணீர் தட்டுப்பாட்டும் கடுமையாக இருக்கிறது.

இதனால், தனியார் வீடுகள், வணிக வளாகங்கள் முக்கியமாக அரசுத் திட்டங்கள், அனைத்தும் கட்டுமானப் பணிகள் நடைபெறாமல் முற்றிலும் முடங்கியுள்ளன. 

மேலும், கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் இதனால் கேள்விக்குறியாகி உள்ளது. 

தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனே தலையிட்டு கட்டுமானப் பணிகள் தடைபடாமல் செயல்பட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.