சிறையில் சசிக்கலா தவ வாழ்க்கை வாழ்வதாகவும் அவருக்கு எந்தவித சலுகைகளும் அளிக்கப்பட வில்லை எனவும், தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிக்கலாவிற்கு சிறைத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்று கொண்டு சிறப்பு சலுகைகள் வழங்கி வருவதாக சிறைத்துறை டிஐஜி ரூபா அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து சசிக்கலாவிற்கு சிறையில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளது சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு.

இதனிடையே சிறைத்துறை டிஐஜி ரூபா மற்றும் டிஜிபி சத்தியநாராயணராவ் ஆகியோர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், சசிக்கலாவிற்கு சிறையில் கூடுதல் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறுவது மனிதாபிமானமற்ற குற்றசாட்டு என தெரிவித்தார்.

மேலும் சசிக்கலா மீது களங்கம் ஏற்படுத்தவே இது போன்ற குற்றச்சாட்டுகளை ரூபா எழுப்பியுள்ளதாகவும், இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது எனவும் தெரிவித்தார்.

சிறையில் சசிக்கலா சொகுசு வாழ்க்கை வாழ வில்லை என்றும் தவ வாழ்க்கையை தான் மேற்கொண்டு வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.