sallikkattu in arasalur - More than 250 bulls were smashed 20 players and injured ...
பெரம்பலூர்
அரசலூரில் 250-க்கும் மேற்பட்ட காளைகள, 150-க்கும் மேற்பட்ட காளையர்கள் கலந்து கொண்ட சல்லிக்கட்டு போட்டியில் காளைகள் தட்டித் தூக்கீயதில் 20 வீரர்கள் காயமடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்தாண்டிற்கான முதல் சல்லிக்கட்டுப் போட்டி, வேப்பந்தட்டை அருகே உள்ள அரசலூரில் நேற்று நடைப்பெற்றது.
இந்த போட்டியையொட்டி அரசலூரில் வயல் வெளிப்பகுதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனையில் 18 மாடுகளுக்கு சல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
பின்னர், மாடு பிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின்னரே போட்டியில் அனுமதிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, கடலூர், விழுப்புரம் மற்றும் சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 250-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிப் போட்டுக்கொண்டு அடக்கினர். அவர்களை மக்கள் கைதட்டியும், விசிலடித்தும் ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களின் கையில் சிக்காமல் அவர்களை தூக்கி எறிந்து பந்தாடின.
காளைகள் முட்டியதில் அன்னமங்கலத்தை சேர்ந்த சபரியார் (35), அரசலூரை சேர்ந்த சின்னப்பன் (20), பெரம்பலூரை சேர்ந்த சரவணன் (37), திருச்சி மாவட்டம் மருதூரை சேர்ந்த மணிகண்டன் (21) உள்ளிட்ட 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சபரியாரை மட்டும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி பாத்திரங்கள், வெள்ளி அரைஞாண் கொடி, வேட்டி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
இதேபோல சல்லிக்கட்டில் கலந்து கொண்ட அனைத்து மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியைக் காண பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, கடலூர், விழுப்புரம், சேலம், அரும்பாவூர், வேப்பந்தட்டை, அன்னமங்கலம், அரியலூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு போட்டியைக் கண்டு களித்தனர்.
