அரியலூர்

கோட்டியால் கிராமத்தில் நடைபெற்ற சல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டது. அதனை அவர்கள் வீரத் தழும்பாய் கண்டனர்.

அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த கோட்டியால் கிராமத்தில் நேற்று சல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்றது. இதனையொட்டி வயல்வெளியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது.

முதலில் காளைகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைப்பெற்றது. பின்னர், வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். இதில் அவனியாபுரம், திருச்சி, மணப்பாறை, லால்குடி, புள்ளம்பாடி, சேலம், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், செயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 250-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

சில காளைகள் வீரர்களின் கையில் சிக்காமல் சீறின. அப்போது மக்கள் கைதட்டி அவர்களை ஆரவாரம் செய்தனர்.

காளைகள் முட்டியதில் மீன்சுருட்டியை சேர்ந்த சக்திவேல் (32), காசான்கோட்டையை சேர்ந்த குமார், காடுவெட்டான்குறிச்சியை சேர்ந்த ராஜாங்கம் (60), பூவந்திக்கொல்லையை சேர்ந்த கொடியரசன் (30) கோபாலபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (20), மீன்சுருட்டியை சேர்ந்த விஜய் (30) ஆகிய ஆறு பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழாக் குழுவினரால் வெள்ளி நாணயங்கள், செல்போன், கட்டில், பீரோ, மின்விசிறி, வேட்டி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

சல்லிக்கட்டு போட்டியை காண திருச்சி, மணப்பாறை, லால்குடி, புள்ளம்பாடி, சேலம், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், செயங்கொண்டம், கோட்டியால், சுத்தமல்லி, விகைகாட்டி, தா.பழூர் உள்ளிட்ட இடங்களை சேர்ந்த திரளான மக்கள் வந்திருந்தனர்.

சல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் கோட்டியால் கிராம மக்கள் செய்திருந்தனர்.