சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட ஆண் குழந்தையை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

சேலம் மாவட்டம் நீர்முல்லிக்குட்டை அருகே உள்ள ராஜாபாளையம் பகுதியை சேர்ந்த இந்துவிற்கு கடந்த 24ம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஆண்குழந்தை பிறந்துள்ளது.

இந்தநிலையில், கடந்த 26ஆம் தேதி இந்துவின் குழைந்தையை கர்ப்பிணி போன்ற தோற்றத்தில் வந்த பெண் திருடி சென்றார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு குழந்தையை திருடி சென்ற பெண் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், கடந்த 26ஆம் தேதி கடத்தி செல்லப்பட்ட குழந்தையை 4 நாட்களுக்கு பின்னர் காவல்துறையினர் தருமபுரி மாவட்டம் பாலகோட்டில் மீட்டனர். இதையடுத்து அந்த குழந்தை தாயிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து பேட்டியளித்த காவல் துணை ஆணையர் ஜார்ஜ் கூறும்போது,

குழந்தையை மருத்துவமனையிலிருந்து கடத்தி சென்ற பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், திருமணமாகி 3 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் அந்த பெண் குழந்தையை கடத்தியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துணை ஆணையர் ஜார்ஜ் தெரிவித்தார்.

மேலும், குழந்தையை பத்திரமாக மீட்டு தந்த காவல்துறையினருக்கு குழந்தையின் தாய் நன்றி தெரிவித்துள்ளார். குழந்தையை விரைந்து மீட்டு தந்த காவல்துறையினருக்கு பொதுமக்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.