8 வழிச்சாலைக்கு நிலம் எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததற்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் குப்பனூரில் விவசாயிகள் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இறுதி வரை சட்டப்படி போராடி வெற்றி பெறுவோம் என்று விவசாயிகள் கூறியுள்ளனர். விளைநிலத்தை மீட்டு இயற்கையை காப்பாற்றுவோம் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

முன்னதாக சென்னை- சேலம் இடையிலான 8 வழிச்சாலை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சுமார் 270 கி.மீ தொலைவில் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கான நிலம் கையப்படுத்தும் பணி அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், நில உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 8 வழிச்சாலை திட்டத்திற்கு மறு உத்தரவு வரும் வரை நிலத்தை கையகப்படுத்த கூடாது என நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்புராயன் ஆகியோர் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். இதனால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.