salem government hospital do not treat well for dengue v

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சம் தீவிரமடைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைக்கு எத்தனை பேர் இறந்தனர்? என எண்ணும் அளவிற்கு தினமும் கணிசமானோர் உயிரிழந்து வருகின்றனர். டெங்குவைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்குநாள் டெங்குவிற்கு பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை என்பது அரசு மருத்துவமனைகள்தான். அப்படி இருக்கையில், கடந்த இரண்டு நாட்களில் டெங்கு பாதிப்பால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சேலம் அரசு மருத்துவமனையின் மீதான சந்தேகத்தையும் எழுப்புகிறது. அங்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என இறந்த குழந்தைகளின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.

டெங்குவால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தவர்கள்: 

சேலத்தில் மட்டும் இரண்டு நாட்களில் குழந்தைகள் உட்பட 10 பேர் இறந்துள்ளனர். 

சேலம் மாவட்டம், மேச்சேரி சொரையனூர் காட்டு வளவைச் சேர்ந்த பழனிசாமியின் 9 வயது மகன், கவி ஆனந்த். 

எடப்பாடி பகுதியைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளி விஜயனின் மனைவி மகேஸ்வரி, வயது 26. 

எடப்பாடி உத்தண்டிக்காடு தாவாந்தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் 14 வயது மகள் சுவேதா. 

சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த செல்வியின் 6 வயது மகன் சந்தோஷ் என்கின்ற பூபதி. 

மேட்டூர் வீரனூரைச் சேர்ந்த ராஜாவின் மகள் வினித்ரா வயது 19. 

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமரேசனின் 8 வயது மகள் சுபஶ்ரீ.

நாமக்கல் டவுன் மஜித் தெருவைச் சேர்ந்தவர் ஷகிலாவின் 9 வயது மகள் பல்ஹிஸ்பானு. 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள திருமனூரைச் சேர்ந்த கிருத்திகா.

இவர்கள் அனைவரும் டெங்குவால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பெற்றோரின் குற்றச்சாட்டுக்கள்:

இவர்களில் பல்ஹிஸ்பானு என்ற 9 வயது குழந்தை, டெங்குவால் மூளைச்சாவு அடைந்ததாக சேலம் அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களது குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்காததுதான் குழந்தை மோசமான நிலைக்கு சென்றதற்கு காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டினர். சேலம் அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்காததைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் குழந்தையின் பெற்றோரும் உறவினர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதேபோல், கிருத்திகா என்ற குழந்தையின் பெற்றோரும் சேலம் அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசுமருத்துவமனைக்கு செல்லுமாறு சுகாதாரத்துறை அமைச்சரும் செயலரும் அறிவுறுத்தினர். அவர்களின் அறிவுறுத்தலை நம்பி சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாமானியர்களும் அவர்களின் குழந்தைகளும் செத்து மடிகின்றனர்.

சேலம் அரசு மருத்துவர்களுக்கு டெங்குவிற்கு சிகிச்சை அளிக்கத் தெரியவில்லையா? டெங்குவிற்கான மருந்துகள் இல்லையா? அல்லது மருத்துவர்களின் அலட்சியமா?

இவற்றில் எதுதான் உண்மையான காரணம் என்பது கண்டறியப்பட வேண்டும் என்றும் கண்டறிந்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் மன்றாடுகின்றனர்.