புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருப்பதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சேலம், கடலூர் மற்றும் கோவை மத்திய சிறைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

சேலம் சிறையில் சேலம் தெற்கு சரக குற்றப்பிரிவு உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசாரும், கடலூர் மத்திய சிறையில் டிஎஸ்பி லாமேக் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசாரும் காலை 6 மணி முதல் அதிரடி சோதனை நடத்தினர். இதே போன்று கோவை மத்திய சிறையிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று தற்போது நிறைவு பெற்றுள்ளது.

 

இந்த சோதனையில் கடலூர் மத்திய சிறையில் சிம் கார்டு மற்றும் செல்போன் பேட்டரி பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 180-க்கும் அதிகமான போலீசார் 3 சிறைகளிலும் சோதனையில் ஈடுபட்டனர்.

சிறை கைதிகளிடம் தடை செய்யப்பட்ட மொபைல் போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் ஏதும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அறியவே இந்த சோதனை நடைபெற்றுள்ளது.