“வறட்சித் தொடர்பான பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளித்து அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்” என்று சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத்-க்கு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஓன்றியங்கள், நகராட்சி, பேரூராட்சிகளுக்கான குடிநீர் வழங்கல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் சம்பத் தலைமைத் தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் கவிதா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயபாபு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அரவாளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது ஆட்சியர் சம்பத் பேசியது:

“முதலமைச்சர் வறட்சித் தொடர்பான பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளித்து அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து அடிப்படைத் தேவையான குடிநீர் மக்களுக்கு தங்குத் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மக்கள் குடிநீர் தொடர்பான புகார் தெரிவிக்க ஏதுவாக 58 பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி, 4 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் மற்றும் 20 ஊராட்சி ஒன்றியங்கள், 385 கிராம ஊராட்சிகள் உள்ள பகுதிகளில் மக்களுக்கு குடிநீர் விநியோகம் சீரான முறையில் வழங்கிட தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளைத் தெரிவிக்க இலவச அழைப்பு எண்கள் மற்றும் தொலைபேசி எண்கள் தொடர்புக் கொண்டு புகார்களைத் தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் வகையில் மாவட்டம் முழுவதும் முறையாக அனுமதி பெறாத 64 வணிக குடிநீர் இணைப்புகள் கண்டறிந்து துண்டிக்கப்பட்டு, 142 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மக்களுக்கு தங்குத் தடையில்லா 100 சதவீதம் குடிநீர் விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று ஆட்சியர் சம்பத் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) ஈஷ்வரன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் தெய்வசிகாமணி, உதவி இயக்குனர்ர் ஊராட்சிகள் (பொறுப்பு) ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.