நீலகிரி

கூடுதல் விலைக்கு மணல் விற்பதால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்டுமானத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலை மாவட்டமான நீலகிரியில் கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் சமவெளி பகுதிகளில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது. இதனால் அந்த பொருட்களின் விலை அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டுமானப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோத்தகிரி பகுதி கட்டுமான தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் 50–க்கும் மேற்பட்ட மக்கள் காமராஜர் சதுக்கத்தில் உள்ள குன்னூர் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வந்து சாந்தி ராமு எம்.எல்.ஏ.வைச் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

பின்னர் அவர்கள் கோத்தகிரி தாசில்தார் மகேஸ்வரியிடமும் கோரிக்கை மனு கொடுத்து, மணல் விலையை குறைக்க லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுகுறித்து கட்டுமானத் தொழிலாளர்கள் கூறியது:

“தமிழக அரசு 2 யூனிட் மணலுக்கு ரூ.1080 விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் திருச்சியில் இருந்து கோத்தகிரிக்கு மணல் கொண்டு வர சுமார் ரூ.13 ஆயிரத்து 80 மட்டுமே செலவு ஆகும். ஆனால் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.37 ஆயிரம் வரை மணல் விற்பனை செய்யப்படுவதால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளியூர் மணல் லாரி உரிமையாளர்கள் குறைந்த விலைக்கு மணல் விற்பனை செய்ய வந்தாலும் உள்ளூரில் சிலர் அவர்களை மிரட்டி அனுப்பி விடுகின்றனர். இதுகுறித்து அதிக விலைக்கு மணல் விற்பனை தடுக்கவும், குறைந்த விலைக்கு மணல் கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கக் கோரி எம்.எல்.ஏ மற்றும் தாசில்தாரிடம் மனு அளித்துள்ளோம். மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் குன்னூர் ஆர்.டி.ஓ.விற்கும் மனுக்களை அனுப்பிவுள்ளோம்” என்று அவர்கள் கூறினர்.