புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் ஏற்பட்டுள்ள கடும் பணத் தட்டுப்பாட்டால், பொதுமக்கள் தொடர்ந்து 6 -ஆவது நாளாக பணத்தை மாற்றவும், பணம் எடுக்கவும் வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் சோகத்துடன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பை தொடர்ந்து, தங்களிடம் இருந்த ரூ. 500, 1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள 10-ம் தேதி முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களும் தற்போது செயல்பட்டு வருகின்றன. ஆனாலும் பணம் நிரப்பப்பட்ட சில மணி நேரத்திலேயே ஏ.டி.எம். மையத்தில் பணம் காலியாகிவிடுவதால் பொதுமக்கள் பணத்தை எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப நேரிடுகிறது.
புதுக்கோட்டை நகரில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் மாலையில் பணம் நிரப்பப்படுவது இல்லை. இதனால் மாலை 6 மணிக்கு மேல் புதுக்கோட்டை, சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏதாவது ஒரு ஏ.டி.எம். மையத்திலாவது பணம் கிடைக்காதா என்ற எதிர்பார்ப்புடன் நகரில் உள்ள அனைத்து ஏ.டி.எம். மையங்களுக்கும் அலைந்து திரிகின்றனர்.
எனவே, அனைத்து வங்கி ஏ.டி.எம். மையங்களிலும் மாலை வேளையிலும் பணத்தாள்களை நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், 6ஆவது நாளான செவ்வாய்க்கிழமையும் வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பணத்தை மாற்றிச் சென்றனர்.
அறந்தாங்கி, திருவரங்குளம், திருமயம், கீரனூர், ஆவூர், இலுப்பூர், அன்னவாசல், நார்த்தாமலை, பொன்னமராவதி, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களிடம் இருந்த பணத்தை மாற்றிச் சென்றனர்.
சிறு வணிகர்களின் வியாபாரத் தேவைகளுக்காக தங்கள் நடப்புக் கணக்கிலிருந்து வாரம் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வரை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பாணை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல வங்கிகளுக்கு வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல வங்கிகளில் மற்ற வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அளவான ரூ.20 ஆயிரம் மட்டுமே வணிகர்களுக்கும் கிடைத்தது.
இதனால் வணிகர்கள் தங்கள் வணிகத்துக்கான தேவையை நிறைவேற்ற முடியாமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
