எண்ணூர் கடற்கரை பகுதிகளில் இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் கச்சா எண்ணெய் அகற்றப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 28-ம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே 2 சரக்கு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் வெளியேறி கடற்கரை பகுதி முழுவதும் எண்ணெய் படலமாக காட்சியளித்தது. இதையடுத்து கச்சா எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், எண்ணூர் கடற்கரை பகுதிகளில் கச்சா எண்ணெய் கசிவு குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார். அப்போது, எண்ணெய் படலம் கடல் ஓரம் இருந்தால் நவீன கருவி பயன்படுத்தி முழுவதும் அகற்றி விடமுடியும் எனவும், கரை ஓரம் இருப்பதால் நவீன கருவியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது எனவும் தெரிவித்தார்.

ராமகிருஷ்ணா நகரில் 80 சதவீதம் கசடு ஒதுங்கி விட்டதாகவும், கசடுகளை அகற்றும் பணி வெற்றிகரமாக கையாளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுவரை 1.60 லட்சம் லிட்டர் கட்ச எண்ணை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜெயகுமார், ஆழ்கடலில் எண்ணெய் படலம் கிடையாது எனவும், நடுகடலில் பிடிக்கப்படும் மீன்களால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் குறிபிட்டார்.

எண்ணெய் படலங்கள் அடர்த்தி குறைந்த இடங்களில் பம்பு மூலம் அகற்றி விட முடியும் எனவும், வலைப்பதிவு மூலம் தவறாக வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.