கடந்த செப்டம்பர் 22ம்தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 5ம் தேதி காலமானார்.

இதை தொடர்ந்து ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் வரை ஏராளமான சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மனு செய்துள்ளனர்.

ஆனால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த தகவல்களை கொடுப்பதற்கு, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. இதற்கு, கவர்னர் அலுவலகமோ, அரசின் பொதுத்துறை பதில் அளிக்க வேண்டும் எனஅறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், தும்மனட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். ஆசிரியர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதவுக்குக்கு அளித்த சிகிச்சை தொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனையிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 9 கேள்விகள் கேட்டு இருந்தார்.

இந்த கேள்விகளுக்கு, அப்பல்லோ மருத்துவமனை தகவல் தர மறுத்துள்ளது. மேலும், மருத்துவமனை சட்ட மேலாளர் எஸ்.எம்.மோகன்குமார், ராஜ்குமாருக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: -

அப்பல்லோ மருத்துவமனை, இந்திய கம்பெனிகள் சட்டம், 1956ன் கீழ் பதிவு செய்யப்பட்டு, 'அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் என்டர்பிரைசஸ் லிமிடெட்' என்ற பெயரில் செயல்படுகிறது. எனவே, எங்கள் நிறுவனம், தகவல் அறியும் உரிமை சட்டம், 2005ன், அதிகார எல்லைக்கு உட்படவில்லை. அதனால், தாங்கள் கோரிய விபரங்களை, எங்களால் வழங்க இயலவில்லை.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து ராஜ்குமார், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மரணம், இறுதி சடங்குகள் குறித்து, 9 வித தகவல்களை கேட்டு, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அலுவலகத்துக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கடிதம் அனுப்பினார்.

ஆசிரியர் ராஜ்குமாருக்கு, கவர்னர் அலுவலகம் அனுப்பிய பதில் கடிதத்தில், தங்கள் விண்ணப்பம், தகவல் அறியும் உரிமை சட்டம் 2005, 6வது பிரிவு, 3வது உட்பிரிவின் படி, தமிழக தலைமை செயலகத்தில் உள்ள, பொதுத்துறையின், பொது தகவல் அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பொதுத்துறையின் மேல் முறையீட்டு அலுவலருக்கு, மேல்முறையீடு செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.