Rs.30 crore for sand mining at Shekar Reddy by ramdoss
தமிழகத்தில் மணல் விற்பனையால், ஆண்டுக்கு ரூ.36,500 கோடி வருவாய் கிடைப்பதாகவும், . ஆனால், ஆட்சியாளர்களின் ஊழலால் அரசுக்கு ரூ.86.33 கோடி மட்டுமே கிடைப்பதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 48 மணல் குவாரிகளின் மூலம் தமிழக அரசுக்கு கடந்த வருவாய் ஆண்டில் கிடைத்த வருவாய் ரூ.86.33 கோடி மட்டுமே என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இது ஒரு பொய்யான தகவல் என்று குறிப்பிட்டுள்ள ராமதாஸ் ஆட்சியாளர்கள் உண்மையான வருவாயை எப்படி மறைக்கிறார்கள் என விளக்கம் அளித்துள்ளார்.
மணல் அள்ளுவதன் மூலம் ரூ.86.33 கோடி மட்டுமே வருவாய் கிடைப்பதாக வைத்துக் கொண்டால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குவாரியிலும் ஒரு நாளைக்கு சராசரியாக 61 சரக்குந்து மணல் மட்டுமே அள்ளப்படுவதாகவும், 48 குவாரிகளிலும் சேர்த்து 2928 சரக்குந்து மணல் மட்டுமே அள்ளப்படுவதாகவும் தான் பொருள் ஆகும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்..
மணல் விற்பனை மூலம் கிடைத்த வருமானம் என தமிழக அரசால் கூறப்படும் தொகையை விட 500 மடங்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது என்பது தான் உண்மை.
வட தமிழகத்தில் பல மணல் குவாரிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சேகர் ரெட்டி என்பவர் வீட்டில் வருமானவரித் துறையினர் கடந்த ஆண்டு திசம்பர் மாதம் 9ஆம் தேதி நடத்திய ஆய்வில் ரூ.33.60 கோடி மதிப்புள்ள ரூ.2000 தாள்கள் உட்பட ரூ.140 கோடி பணமும், 180 கிலோ தங்கக்கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அதாவது சேகர் ரெட்டிக்கு மணல் குவாரியிலிருந்து ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.1.35 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. இத்தனைக்கும் சேகர் ரெட்டி மணல் விற்பனையாளர் அல்ல.
ஆற்றில் மணலை வெட்டி சரக்குந்தில் நிரப்புவது தான் அவரது வேலை. ஒரு சரக்குந்தில் இரு அலகுகள் மணல் ஏற்றப்படும். இதற்காக அரசுக்கு ரூ.800 கட்டணம் செலுத்த வேண்டும். அதில் 220 ரூபாய் சேகர் ரெட்டி நிறுவனத்திற்கு வழங்கப்படும். அதைக்கொண்டே சேகர் ரெட்டி ஆண்டுக்கு ரூ.493 கோடி வருவாய் ஈட்டுகிறார்.
இத்தனைக்கும் சேகர்ரெட்டி நிறுவனம் இரு மாவட்டங்களில் மட்டும் தான் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. கூலிக்கு மணல் அள்ளிக்கொடுக்கும் சேகர்ரெட்டி நிறுவனமே ஆண்டுக்கு சுமார் ரூ.500 கோடி வருவாய் ஈட்டும் போது, தமிழகத்தில் 32 மாவட்டங்களில் அமைந்துள்ள மணல் குவாரிகளின் உரிமையாளரான அரசுக்கு ஆண்டுக்கு ரூ.86 கோடி மட்டும் தான் வருவாய் என்பதை எப்படி ஏற்க முடியும்.
உண்மையில் தமிழகத்தில் ஒரு நாளைக்கு மணல் விற்பனை மூலமாக மட்டும் ரூ.100 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆண்டுக்கு ரூ.36,500 கோடி வருமானம் கொட்டுகிறது. ஆனால், அமைச்சர்களும், ஆளுங்கட்சியினரும் கொள்ளையடித்தது போக எஞ்சிய சிதறலான ரூ.86.33 கோடி மட்டும் தான் தமிழக அரசின் கஜானாவில் சேர்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் பொருளாதார சீர்குலைவுக்கு காரணமாக திகழும் மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்த தமிழக ஆளுனர் ஆணையிட வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
