சென்னையில் இயங்கும் கனிஷ்க் ஜூவல்லரி நகைக்கடை மீது ரூ.824.15 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்திருப்பதாக அதன் உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் மீது எஸ்.பி.ஐ. வங்கி தலைமையிலான கூட்டமைப்பு, சி.பி.ஐ.யில் புகார் அளித்துள்ளது. கனிஷ்க் ஜூல்லரி நகைக்கடை மீது 16 பக்க குற்றச்சாட்டுகளை சிபிஐயிடம் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய, கார்ப்பரேஷன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகளில் ரூ.824.15 கோடி கனிஷ்க் நிறுவனம் செலுத்தாமல் உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனிஷ்க் ஜூவல்லரி நகைக்கடை நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் புபேஷ் ஜெயின், போலியான கணக்குகளை காட்டி வங்கியில் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், கனிஷ்க் ஜூவல்லரி நகைக்கடைகளில் சோதனை நடத்தவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கனிஷ்க் நிறுவனத்தின் உரிமையாளர் புபேஷ் குமார் கைது செய்யப்பட்டார். சில வாரங்களில் ஜாமினில் வந்த அவர், தற்போது தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தாங்கள் கொடுத்த கடனுக்கு பல மாதங்களாக வட்டி வராததால் தற்போது சிபிஐக்கு எஸ்.பி.ஐ. வங்கி தலையிலான கூட்டமைப்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.