Rs 7 lakh fraud by claiming work people give petition to collector...
திருநெல்வேலி
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 இலட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏமாந்தவர்கள், ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இதற்கு ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை தாங்கினார். பல்வேறு ஊர்களை சேர்ந்த மக்கள் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த பேச்சியம்மாள், கோவில்பட்டியை சேர்ந்த அந்தோணி குரூஸ், கொடியன்குளத்தை சேர்ந்த பரமேசுவரி உள்ளிட்டவர்கள் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில், “பாவூர்சத்திரத்தை சேர்ந்த இருவர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 இலட்சம் வரை மோசடி செய்துள்ளனர். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடி செய்த பணத்தை மீட்டு தர வேண்டும்” என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
அதேபோன்று, தென்காசி தாலுகா மேலப்பாட்டாக்குறிச்சி இந்திரா காலனியை சேர்ந்த கிராம மக்கள் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள், ஆட்சியரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், “எங்கள் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் 41 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கொடுக்கப்பட்டது. சிலர் போலிப்பதிவு மூலம் அரசு கொடுத்த இலவச வீட்டுமனை பட்டாவை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
அந்த பட்டாக்களை மீட்டு தர வேண்டும். மேலும் எங்கள் ஊரில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஒரு சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும்” என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
